முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்த காத்திரமான வேலைத் திட்டம் அவசியம்!

Jameel-MPC-21-150x150அஸ்லம் எஸ்.மௌலானா
முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்த காத்திரமான வேலைத் திட்டம் அவசியம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மு.கா. குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சமூகம் தனது இலக்கினை அடைந்து கொள்வதற்கு சுயநலமற்ற, தூரநோக்கு சிந்தனையுடைய மாற்று அரசியல் தலைமைத்துவம் ஒன்றை பலப்படுத்த வேண்டிய தருணம் வந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இனிவரும் காலங்களில் முஸ்லிம் சமூக இருப்பையும் பாதுகாப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துவதற்கு காத்திரமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. தமது குறுகிய அரசியல் லாபங்களுக்காக மார்க்கத்தின் பெயரால் சமூகத்தை விலை பேசி, அடகு வைக்கின்ற ஏமாற்று தலைமைகளின் செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்தும் இடமளிக்க கூடாது.
நல்லாட்சி மலர்ந்துள்ள சூழ்நிலையில் இந்நாட்டு முஸ்லிம்கள் தாய் மண்ணில் அனைத்து உரிமைகளுடனும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான வழி வகைகள் வகுக்கப்பட வேண்டும். இதற்காக எமது சமூகத்தில் நேர்மையாக சிந்திக்கக் கூடிய மாற்று அரசியல் சக்தி ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் அதற்காக முஸ்லிம்கள் அனைவரும் இன்றைய திருநாளில் திடசங்கற்பம் பூண வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன். .
மேலும் ரமழான் மாதம் நமக்கு கற்றுத்தந்த படிப்பினைகள் இத்தகைய மாற்று சிந்தனைகளின் எழுச்சிக்கு உறுதுணையாக அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். -ஈத்முபாரக்