முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம் !

 

mahinda-deshapriya-election-commior

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் விளக்கமளித்தார்.

இதன்போது, வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியையோ முன்னாள் அமைச்சர்களையோ அடிப்படையாகக் கொண்டு அவ்வாறு முன்னெடுக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

அத்துடன், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி பொலிஸ் மாஅதிபருடனும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருடனும் தாம் கலந்துரையாடிய பின்னரே பாதுகாப்பு நீக்கம் தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் பேரணிகளைத் தாம் தடுத்த விதம் தொடர்பில் விளக்கமளித்த தேர்தல்கள் ஆணையாளர், இம்முறை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் இந்த வார இறுதியில் ஆராய்ந்து பொலிஸ் திணைக்களத்திடம் ஒப்படைக்க எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏதேனும் தவறொன்று இழைக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பில் தமக்கு முறைப்பாட்டை முன்வைக்காது, பொலிஸ் மாஅதிபரும் தேர்தல்கள் ஆணையாளரும் உறக்கத்திலா உள்ளார்கள் என பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன், மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் கூட்டங்களை நடத்த ஒழுக்கக்கோவை ஒன்றையும் தாம் வெளியிட எண்ணியுள்ளதாகவும் பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வது பொலிஸாரின் பொறுப்பு எனவும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

இதேவேளை, குருநாகல் பகுதி வேட்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு காரணமாக ஏனைய வேட்பாளர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்கு, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்படாது எனவும் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விட, அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் எனில், தேர்தல்கள் ஆணையாளர் என்ற ரீதியில் உரிமைகள் மீறப்பட்டுள்ளது என தம்மால் முன்நிற்க முடியாது எனவும் மஹிந்த தேசப்பிரிய பதிலளித்தார்.