அஸ்லம்.எஸ்.மௌலானா
நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசங்களை அவசரமாக சுத்தப்படுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
அதேவேளை கல்முனை யானைப்பந்தி கோயில் வீதி உட்பட சில வீதிகளில் தினமும் குவிக்கப்படுகின்ற திண்மக் கழிவுகளை தினசரி கிராமமாக அகற்றுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
பெருநாள் தினத்தில் பொழுதுபோக்குகளுக்காக கடற்கரைப் பிரதேசங்களில் பொது மக்கள் கூடுவதைக் கருத்தில் கொண்டே அப்பகுதிகளை சுத்தப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அசுஹர் உட்பட மற்றும் பல அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.