தேர்தல் அறிவிப்பின் பின்னர் வழங்கப்படும் அரச நியமனங்கள் குறித்து அதிக முறைப்பாடுகள்!

Caffe

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அரச நிறுவனங்களினூடாக தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுப்பது குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச நிறுவனங்களில் அதிக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றர்.

பதவி உயர்வு, புதிய நியமனங்கள் மற்றும் அரச வளங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துதல் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் தேர்தல்கள் ஆணையாளரிடம் இன்று (09) முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் ரசாங்க ஹரிஷ்சந்திர கூறியுள்ளார்.

இதேவேளை, வடமத்திய மாகாணத்தில் புதிய நியமனங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலை இலக்காக கொண்டு பலருக்கு தொழில் வாய்ப்புகள் அரச நிறுவனங்களில் வழங்கப்பட்டுள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பான கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.