உள்நாட்டு உணவு உற்பத்தி, போதைப்பொருள் தடுப்பு போன்று சூழல் பாதுகாப்புக்காக விரிவான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவேன் – ஜனாதிபதி

Maithripala-Sirisena

உள்நாட்டு உணவு உற்பத்தி, போதைப்பொருள் தடுப்பு போன்று சூழல் பாதுகாப்புக்காக விரிவான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த மூன்று விடயங்களும் இன்று நாட்டில் முக்கிய பிரச்சினையாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு தீர்வு வழங்குவதற்கு தமது அரசு முக்கிய பொறுப்பாகக் கருதி நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்குரிய அடிப்படைத் திட்டங்களை ஜனாதிபதி அலுவலகத்தின் இணைப்பாக்கத்துடனும் குறித்த நிறுவனங்களின் பங்களிப்புடனும் தற்பொழுது தயாரித்து முடிக்கப்பட்டுள்ளதெனவும் கூறினார்.

சூழல் மற்றும் மிருக வதைக்கு எதிரான அமைப்பின் பிரதிநிதிகளுடன் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

‘தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படுகின்ற உணவு வகைகள் பல எமது நாட்டிலேயே தயாரிக்கக்கூடியவையாகும். அத்துடன் உள்ளூர் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கின்ற அரசு என்ற வகையில் அதற்கு துரித தீர்வு தேட வேண்டும்’ எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன், கடுமையான சமூக துன்பச் செயலாக மாறியிருக்கின்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. சூழல் பாதுகாப்பும் இன்று எமக்கு சவாலாக எழுந்துள்ளது. அத்துடன் எதிர்கால சந்ததியினருக்காக சூழலை பாதுகாப்பதற்கு அரசுக்கு பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அபிவிருத்தியும் சூழல் பாதுகாப்பும் ஒன்றாக பயணிக்கவேண்டிய இரண்டு விடயங்கள் என்பதையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். கடந்த அரசாங்கத்தில் யானைக் குட்டிகள் களவாடப்பட்டமை தொடர்பாக இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் அதன் தவறாளிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இதன்போது முக்கியமான மூன்று அறிக்கைள் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன. துரித தீர்வுகள் வழங்கப்படவேண்டிய சூழல் பிரச்சினை, உள்ளூர் நன்னீர் மீன் வளங்களை ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட தகவல்களுடன் யானைக்குட்டிகளை வீடுகளில் வளர்த்தல் தொடர்பாகவும் அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.