அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது பிரதான வீதியையும் பொலிவேரியன் நகரையும் இணைக்கும் வடக்கு வீதிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் றிஸ்வி சின்னலெப்பையின் பெயரை சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை மாலை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் இது தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பித்தார்.
இதனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் ஆமோதித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பிரேரணை அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதான வீதியையும் பொலிவேரியன் நகரையும் இணைக்கும் வடக்கு வீதிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் றிஸ்வி சின்னலெப்பையின் பெயரை சூட்டுவதற்கு, மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சபை செயலாளருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.