எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் நாட்டின் தனிநபர் வருமானத்தை 6,000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தெஹிஓவிட பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (29) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
சீதாவாக்க கங்கையில் மாணிக்க கல் அகழ்வு கூட்டு திட்டத்தின் நன்மைகளை அந்த பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இந்த நிகழ்வு இடம்பெற்றது.
165 புனித ஸ்தலங்கள் ,சமூர்த்தி பயனாளிகள் , அங்கவீனர்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த 900 சிறார்களுக்கு 342 இலட்சம் ரூபா நிதி இதன் போது பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதன் போது ஜனாதிபதி தெரிவித்ததாவது..
“நாட்டின் பொருளாதாரம் என்பது அந்த நாட்டு மக்களின் வருமானம் , தேசிய பொருளாதார நிலைமை மற்றும் அந்நிய நாட்டு செலாவணி என்பவற்றின் அடிப்படையிலேயே காணப்படுகின்றது. எனவே எதிர்வரும் 5 வருடங்களுக்குள் தனிநபர் வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க உத்தேசித்துள்ளோம். இதனை அடைய எமது முதலீடுகள் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி போன்ற துறைகள் மேலும் வலுவடைய வேண்டும்”.