தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு மற்றும் புலிகளின் அனுதாபிகள் தொடர்ந்தும் இயங்குவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தொடர்பில், அரசாங்கம் தீவிர கவனமெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு, அபயராமவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச நிதி வலையமைப்பு தொடர்பான விடயத்தை கையாளும் போது, ஏற்கெனவே இரண்டு தடவைகள் விழுந்ததைப்போல் அதே வலையில் விழுந்து விட வேண்டாமெனவும் வலியுறுத்தினார்.
சர்வதேச நிதி வலையமைப்பினூடாக வழங்கப்படும் நிதியுதவியால் எல்.ரீ.ரீ.ஈ தொடர்ந்தும் இயங்குகிறது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தாக அவர் தெரிவித்தார். பிரதமர், அமைச்சரவையை கூட்டி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாவார் என நம்புவதாகவும் அவர் கூறினார்.