இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து வென்றது.
முதல் மற்றும் நான்காவது போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவது மற்றும் 3- ஆவது போட்டியில் நியூஸிலாந்தும் வெற்றி பெற்றது.
இதனால் 2-–2 சமநிலையில் இருந்ததால் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லுவது யார்? என்ற எதிர்பார்ப்புடன் இறுதிபோட்டி நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்தது. அதன்படி நியூஸிலாந்து அணியின் குப்தில், மெக்கலம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கலம் (6) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து குப்தில் உடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதனால் அந்த அணி 19.1 ஓவரில் 100 ஓட்டங்களைத் தொட்டது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். அணியின் ஓட்ட எண்ணிக்கை 101 ஓட்டங்களாக இருக்கும்போது வில்லியம்சன் 50 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். அடுத்து டெய்லர் களம் இறங்கினார். 67 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் குப்தில் ஆட்டம் இழந்தார்.
நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும்இ பின்இ வில்லேஇ ரஷித் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினார்கள்.
மழை காரணமாக இங்கிலாந்திற்கு 26 ஓவரில் 192 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும் இறுதியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து 25 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக 80 ஓட்டங்களைக் குவித்த ஜானி பேர்ஸ்டோவ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக நியூஸி லாந்து அணியின் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.