கட்சி தலைமையகத்துடன் தொடர்பில்லாதவர்களுக்கு கட்சியை இனங்கண்டுகொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தெரிவாகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 127 பேரும் கட்சியின் தலைமையகத்தால் கட்சியின் மேம்பாட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லையென என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர இளைஞர் முன்னணியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கட்சியின் நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் நிறுவன கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் கட்சியின் தலைமையகத்திலேயே நடத்தப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். இவை தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் அமைப்பாளர்கள் உள்ளிட்டோரும் கட்சித்தலைமையகத்தில் கலந்துரையாடுவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.