சிறுபான்மைத் தலைவர்களின் மூன்றம்சக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சோபித்த தேரர் !

Minister_Rishad_3_0-150x150_Fotor_Collage_Fotor

 சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளின்  இரட்டை வாக்கு  கோரிக்கையை, வண. சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இன்று சனிக்கிழமை(20) தெரிவித்தார்.    

 சிறு மற்றும் சிறுபான்மை கட்சி பேரவைக்கும், விகாராதிபதி வண. சோபித தேரருக்கும் இடையிலான கலந்துரையாடல் கோட்டே நாகவிகாரையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு மேலும் கூறியதாவது, உடனடியாக தேர்தல்முறை மாற்ற 20ஆம் திருத்த வர்த்தமானி பிரகடனத்தை வாபஸ் வாங்குங்கள். அதை வாபஸ் வாங்கியதன் பின்னர் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி, இரட்டை வாக்கு முறைமையை தேர்தல் முறை மாற்ற யோசனை திட்டத்தில் உள்வாங்கி, அதை நாடாளுமன்றம் கொண்டு சென்று சட்டமாக்குங்கள்.

 இந்த இரண்டையும் செய்ய முடியாவிட்டால், இந்த காலாவதியான நாடாளுமன்றத்தை உடன் கலைத்து விட்டு, புதிய தேர்தலை, நடப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்தி, புது நாடாளுமன்றத்தை உருவாக்கி, அதில் தேர்தல் சட்டம் உட்பட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் புதிய அரசியலமைப்பை சட்டமாக்குங்கள். 

   எங்களுடனான பேச்சுக்களையடுத்து மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட வண. சோபித தேரர், அரசாங்கத்துக்கு அவற்றை முன் வைத்ததுடன் தொடர்ந்து எம்முடன் இணைந்து பணியாற்ற உடன்பட்டுள்ளார்.

 இது எமது சிறு மற்றும் சிறுபான்மை கட்சி பேரவைக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும். நாளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் சந்திக்க ஏற்பாடாகியுள்ள கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை எடுத்து கூற உள்ளோம் என தெரிவித்தார்.

 இச் சந்திப்பில், சோபித தேரர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், திஸ்ஸ விதாரண, ரிசாத் பதுதீன், டக்ளஸ் தேவானந்தா, சிறிதுங்க ஜெயசூரிய, அசாத் சாலி ஆகியோர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.