புலிகளுடன் தொடர்புடையவருடன் ஒப்பந்தம்: சேனுக்கா மீதான குற்றச்சாட்டுக்கள் நீக்கம் !

 
 z_p01-Kshenuka’s
ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரத்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தை புனரமைப்புச் செய்வது தொடர்பாக, அப்போதைய நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதியும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும், தாய்லாந்துக்கான தற்போதைய இலங்கைத் தூதுவருமான சேனுக்கா செனவிரத்ன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தவறானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில்; கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரத்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் 2009 ஆண்டு இடம்பெற்ற இந்தப் புனரமைப்பு வேலைகள் தொடர்பான ஒப்பந்தம் விடுதலைப் புலிகள் அமைப்போடு சம்பந்தப்பட்ட பி.ரி. துரைராஜா என்பவருக்கு வழங்கப்பட்டதாகவும், அத்தோடு குறித்த புனரமைப்புப் பணிகள் சரிவர இடம்பெற்றிருக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சேனுக்கா செனவிரத்னவைத் தொடர்ந்து ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியை வகித்த தமாரா குணநாயகம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து, கணக்கறிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் சேனுக்கா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தற்போது புதிய அரசாங்கத்தின் கீழ், தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவராக சேனுக்கா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எழுப்பப்பட்ட எதிர்ப்புக்குரல்களைத் தொடர்ந்து, இது தொடர்பான விசாரணையொன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகளின் முடிவில், குறித்த ஒப்பந்தமானது சேனுக்கா பதவியேற்பதற்கு முன்னதாகவே வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, வேறு அவசரப் பணிகள் காரணமாகவும் விடுப்பில் காணப்பட்ட காரணத்தாலும், குறித்த புனரமைப்புப் பணிகள் தொடர்பான மீளாய்வுகளையோ அல்லது அந்த ஒப்பந்தப் பணிக்கான முதலிரண்டு கொடுப்பனவுகளையோ சேனுக்காவால் மேற்பார்வை செய்ய முடியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

ஆனால், மூன்றாவது கொடுப்பனை மேற்கொள்வதற்கு முன்னதாக, குறித்த புனரமைப்புப் பணிகளை சேனுக்கா நேரடியாக மீள்பார்வை செய்தார் எனவும், அதில் திருப்தியடைந்த பின்னரே அந்தக் கொடுப்பனவை மேற்கொண்டார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்தப் புனரமைப்புத் தொடர்பான நடவடிக்கையில் கணிசமானளவு, சேனுக்கா பதவியேற்பதற்கு முன்னதாகவும் அவர் ஜெனிவாவில் இல்லாத காலங்களில் இடம்பெற்றுள்ளதால், குறித்த பணிகளில் காணப்பட்ட ஏதாவது குறைபாடுகள் தொடர்பாக அவர் பொறுப்புக் கூறுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என விசாரணை முடிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புகளைப் பேணினார் என்ற குற்றச்சாட்டுக்கள், குறித்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரேயே வெளிவந்ததாகவும், எனவே, நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதியின் அலுவலகத்தில் பணிபுரிந்த எல்லாப் பணியாளர்களும் குறித்த குற்றச்சாட்டுக்குப் பொருத்தமற்றவர்கள் என அறிவிக்கப்படுகிறது.
அத்தோடு, சேனுக்கா செனவிரத்னவின் கணவர், குறித்த நபரான துரைராஜாவின் உப-ஒப்பந்தக்காரர் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் புனையப்பட்டவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சம்பந்தப்பட்டுள்ள நபரான துரைராஜா, விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணினாரா என்பது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் விசாரணை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் மேலும் அறிவிக்கப்படுகிறது.