வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு ஆதாரங்களை வழங்குவதற்காக உயர்நீதிமன்றம், திகதி குறித்துள்ளது.
இந்த வழக்கு, நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, சரத் டி அபுரூ மற்றும் உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் நேற்று புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதியரசர்கள் குழு மேற்கண்டவாறு பணித்துள்ளது.
இந்த வழக்குக்கு மேலும் ஆதாரங்களை வழங்குவதற்கான தினமாக ஜூன் 29யை உயர்நீதிமன்றம் குறித்துள்ளது. திவிநெகும சமுதாய அடிப்படை வங்கிகளின் நிதியை, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு கடன் வழங்குவதற்கு பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டரீதியற்ற திவிநெகும கடன் சிபாரிசுகள் தொடர்பில் நிதிக்குற்ற புலனாய்வு பிரிவு, பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஆகியோரை விசாரணை செய்யுமாறு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்று கோரி, மனுதாரர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் பிரதிவாதிகளாக வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சட்டமா அதிபர் உட்பட 10 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் மனோகர டி சில்வா ஆஜராகியிருந்தார்.
பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ சார்பில் றொமேஷ் டி சில்வா ஆஜராகியிருந்தார். 25.03.2015 திகதியிட்ட சுற்றுநிரூபத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கடன் திட்டம் எதேச்சாதிகாரமானது எனவும் திவிநெகும சமுதாய வங்கியில் கடன் பெறும் முறைமையை குழப்பிவிட்டுள்ளதாவும் மனுதார் கூறியுள்ளார்.
புதிய முறையூடாக திவிநெகும வங்கிகளை அரசியல் சலுகைகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தமது முறைப்பாட்டை நிதிமோசடி விசாரணை பிரிவு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் பிரதமரினால் அனுப்பப்படும் முறைப்பாடுகளை மட்டுமே தாம் ஏற்றுக்கொள்வதாக நிதி மோசடி விசாரணை பிரிவு அறிவித்துள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரானசட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.