ஹஜ்ஜை வியாபாரமாக்கியதன் எதிரொலியே கோட்டாக்களை பகிர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது!

ஊடக அறிக்கை 
ஹஜ் விவகாரத்தை பணம் சம்பாதிப்பதற்கான வியாபாரமாக மாற்றியதன் எதிரொலியே கடந்த சில வருடங்களாக ஹஜ் கோட்டாக்களை பகிர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி பிரச்சார இணைப்பு செயலாளர் அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; 
“ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இறுதியானது. பண வசதி உள்ளவர்களுக்கு மட்டும் கடமையான அது மிகவும் புனிதம் வாய்ந்தது என்பதுடன் முஸ்லிம்கள் உயிரிலும் மோலாக மதிக்கும் புனித மக்காவை தரிசிக்க கிடைக்கும் அறிய சந்தர்ப்பமுமாகும். 
இப்புனிதப் பயணத்திற்கு வழிகாட்டிகளாக செல்வதே ஹஜ் பிரயாண முகவர்களின் பணியாகும். இதற்காக நியாயமான அளவில் சேவைக் கட்டணம் அறவிடுவதில் தவறில்லை. ஆனால் இதற்கு மாற்றமாக ஹாஜிகளிடம் பணத்தை கொள்ளையடித்து வருகின்ற இம்முகவர்கள் இன்று அதனை வியாபாரமாக்கி தங்களுக்குள் கடும் போட்டியை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே களம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அக்காலப் பகுதியில் ஹஜ் விவகாரம் அரசியலாக்கப்பட்டிருந்தது..ஒரே அரசாங்கத்திற்குள் பௌசி- அலவி என இரு அணியும் பின்னர் பௌசி- காதர் என இரு அணியும் ஹஜ் விவகாரத்தை பலப் பரீட்சியையாக மாற்றியிருந்தது. தமக்கு வேண்டிய முகவர்களுக்கு கூடுதலான கோட்டாக்கள் வழங்கப்படுவதும் அதற்காக கமிஷன் பெறுவதும் சாதாரணமாக மாறியது. இதனால் ஹாஜிகளே பெரும் நெருக்கடிகளையும் நஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடுகிறது.
இப்போட்டி எந்தளவுக்கு சென்றது என்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் முஸ்லிம்களின் விரோதியான பொது பல சேனாவிடம் நீதி கேட்டுச் செல்வதற்கும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும் இட்டுச் சென்றது. இத்தகைய கீழ்த்தரமான வேலைகளைச் செய்கின்றவர்கள்தான் புனித ஹஜ்ஜுக்கான வழிகாட்டல் சேவையை வழங்க்குகின்றவர்களா எனக் கேள்வி எழுப்பும் அளவுக்கு ஹஜ் முகவர்களின் பணம் சூரையாடளுக்கான வெறித்தனம் காணப்படுகிறது. இவை அந்நிய மதத்தினர் மத்தியில் இஸ்லாம் மார்க்கத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இழிவை ஏற்படுத்தும் செயல்களாகும்.
எல்லாவற்றையும் போல் ஹஜ் விவகாரத்தையும் அரசியலாக்கி, வியாபாரமாக மாற்றியமைத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு தசாப்த கால மோசடி நிறைந்த ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ள சூழலில் ஹஜ் கோட்டாக்கள் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட விடயங்களில் காணப்படுகின்ற குளறுபடிகளை சீரமைப்பதற்கு புதிதாக பதவியேற்றுள்ள முஸ்லிம் சமய, கலாசார அமைச்சர் ஏ.எச்.ஏ ஹலீம் அவர்கள் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இது விடயத்தில் அமைச்சர் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளார்.
ஆனால் கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக அதிக கோட்டாக்களைப் பெற்று அதிக பணம் சம்பாதித்து வந்த முகவர்கள் ஒத்துழைக்க மறுப்பதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய ஹஜ் முகவர்கள் அனைவரையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய ஷூரா சபை என்பன நேரடியாக அழைத்து கருத்தரங்குகளை நடாத்தி, அறிவுரைகளை வழங்கி நெறிப்படுத்த முன்வர வேண்டும்.
அத்துடன் எதிர்காலங்களில் ஹஜ் முகவர்களுக்கு கோட்டாக்களை பகிர்ந்தளிப்பதை தவிர்த்து, முஸ்லீம் சமய, கலாச்சார தினைக்களமே அனைத்து யாத்திரிகற்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேன்டும். இவ்விடயத்தில் அரசியல், பொருளாதார இலாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு அரசாங்கம் செயற்படுமானால் ஹஜ் பிரயாண ஏற்பாடுகளில் கானப்படுகின்ற மோசடிகள், குளறுபடிகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து நேர்த்தியான சேவையை வழங்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Aswan moulana_Fotor