சாய்ந்தமருது தோணா மீண்டும் அசுத்தப்படும் அபாயம்!!!

எம்.வை.அமீர் 

சாய்ந்தமருதின் துயரமாக இருந்த தோணாவை, பல்வேறு தரப்புக்களாலும் ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் தனது அமைச்சின் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், முதலாம்கட்ட வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், குறித்த தோணாவை அண்டிய பிரதேசங்களில் மீண்டும் கழிவுகள் வீசப்படுவது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

காணி மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு இயக்குனரும் அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி அவர்களது நேரடி கண்காணிப்பில் நகர அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த தோணா அபிவிருத்தி பணிகளை, தோணாவை அண்டி வாழும் மக்கள் நன்றியுடன் பார்க்கின்ற இவ்வேளையில், சிறிதுகாலம் இப்பிரதேசத்தவர்களால் தோணாவில் கழிவுகளை வீசும் வீதம்மிகவும் குறைந்திருந்தது. அதேவேளை கல்முனை மாநகரசபை கூட தினமும் தோணாவை அண்டிய பிரதேசங்களில் கழிவுகளை அகற்றிவந்தன. ஆனால் தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதுபோல் கல்முனை மாநகரசபையும் கழிவுகளை அகற்றும் தினங்களை குறைத்துள்ளன மக்களும் மீண்டும் பழைய குருடி கதவைத்திறடி என்றதைப்போல் கழிவுகளை வீச ஆரம்பித்துள்ளார்கள்.

சாய்ந்தமருது தோணா மீண்டும் அசுத்தப்படக்கூடிய அபாயத்தை உடன் தவிர்க்க சம்மந்தப்பட்ட பிரதேசமக்கள், கல்முனை மாநகரசபை, கல்முனை பொலிஸ் சுற்றுச்சுழல் பாதுகாப்புப்பிரிவு, சாய்ந்தமருது பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் எல்லாவற்றையும்விட மேலாக சாய்ந்தமருது பள்ளிவாசல் என்பன முன்வரவேண்டும் வேண்டும் என சாய்ந்தமருது தோணாவை அபிவிருத்தி செய்வதில் அக்கறையுள்ள அனைவரும் வேண்டி நிற்கின்றனர்.

தோணாவை சுத்தமாக பாதுகாப்பது தொடர்பில் முழு சாய்ந்தமருது மக்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்வுகளை மேற்படி நிறுவனங்கள் நடத்தவேண்டிய இவ்வேளையில் தினமும் கல்முனை மாநகரசபை கழிவுகளை அகற்றவேண்டியதுடன், கல்முனை பொலிஸ் சுற்றுச்சுழல் பாதுகாப்புப்பிரிவு தினமும் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு சுற்றுச்சுழலுக்கு தீங்கான முறையில் அசுத்தங்களை தோணாவை அண்டிய பிரதேசங்களில் வீசுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை சாய்ந்தமருது பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் அவர்களுக்கான பணிகளை தீவிரப்படுத்தவேண்டும். சாய்ந்தமருது பள்ளிவாசல், உள்ளூர் பள்ளிவாசல்கள் ஊடாக இஸ்லாத்தில் சுத்தத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகளை விரிவாக எடுத்துக்கூற வேண்டும்.

ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் கூட தோணா அபிவிருத்தித் திட்டத்தை சுத்தப்படுத்துவதுடன் நிறுத்திவிடாது தோணாவின் இரு ஓரங்களிலும் பாதுகாப்பு சுவர்களை அமைத்தல் வீதிகளை புனரமைத்தல் மின்சார வசதிகளை ஏற்படுத்துதல் மரங்கள் நடுதல் பொழுதுபோக்கு இடமாக மாற்றுதல் போன்ற செயற்பாடுகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தவேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சாய்ந்தமருதில் தோணாவின் துயரம் எப்போது தீரும்?????????

1 (1)_Fotor 2_Fotor