புலம்பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு நேற்று இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. கொழும்பு கோட்டையிலுள்ள வெளிவிவகார அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புலம்பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் இரட்டைப்பிரஜாவுரிமை சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.
மேலும் இதன்போது இரட்டைப்பிரஜாவுரிமை பெற்றவர்கள் எழுந்து நின்று சத்தியப்பிரமாணமும் செய்து கொண்டனர். இலங்கையின் பிரஜாவுரிமை தொடர்பில் 1948 ஆம் ஆண்டின் போதே சட்டம் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்ட நிறைவேற்றத்தின் பிரகாரம் 18 ஆம் இலக்க சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதேவேளை இலங்கையில் இரட்டைப்பிரஜாவுரிமை 1987 ஆம் ஆண்டே இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அந்த வருடத்தின் போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 45 ஆவது இலக்க சட்டமூலத்தின் பிரகாரம் இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கல் செயற்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இதுவரையில் சுமார் 34 ஆயிரம் பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் 2011 ஆம் ஆண்டளவில் இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கல் அரசாங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதன்படி சுமார் நான்கு ஆண்டுகள் இரட்டைப்பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாத நிலைமை காணப்பட்டது.
எவ்வாறாயினும் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவையின் அனுமதியுடன் இரட்டைப்பிரஜாவுரிமை மீள வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரைக்கும் 2000 விண்ணப்பங்கள் இரட்டைப்பிரஜாவுரிமைக்கு கிடைக்கப்பெற்றாலும் புதிய ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் முதலில் விண்ணப்பம் செய்த 450 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே நேற்று மேலும் 150 பேருக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது