எமது மாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம். கிட்டத்தட்ட 150 000 இராணுவத்தினர் வடக்கில் இருக்கிறார் கள். 6 சிவிலியன்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் உள்ளனர்.
இது எமக்கு பாரிய தடையாக உள்ளது. நீண்டகாலமாக இராணுவத்தினர் இருப்பதால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்புக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் எனது நண்பர்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்னை சந்திக்க வருவதும் உண்டு. ஆனால் அவர்கள் வர்த்தகம் செய்கின்றனர். மீன்பிடித் தொழி லில் ஈடுபடுகின்றனர். இது யாழ்ப்பாணத்தின் மக்கள் வாழ்க்கைக்கு பாரிய தடையாக உள்ளது என்றும் வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது எவ்வாறு எனும் தொனிப்பொருளில் ராஜகிரியவில் அமைந்துள்ளதேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையில் விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு முதல்வர் இந்த விடயத்தை முன்வைத்தார்.
அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு முதல்வர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடமாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாத்துக்கு பிறகுதான் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதற்கு முன்பு போதைப் பொருள் பாவனை அங்கு இருக்கவில்லை.
இராணுவத்தின் நிர்வாகத்தின்கீழ் வடமாகாணம் இருந்த காலத்திலே அங்கு போதைப் பொருள் பாவனை பாரியளவில் அதிகரித்தது.இதற்கு இராணுவத்தினரே பதில் கூறவேண்டும்.
வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. புலிகளின் காலத்தில் போதைப்பொருள் பாவனை அங்கு இருக்கவில்லை. 2009 மே மாதத்துக்கு பின்னர்தான் இந்த பாவனைக்கு அங்குள்ள மக்கள் பழக்கப்பட்டார்கள்.
வடக்கு மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் கடந்த 30 வருட காலம் பல்வேறு இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள். அத்தோடு தொழில்வாய்ப்பின்மையும் அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. இவ்வாறானவர்கள் மிக இலகுவாக போதை பழக்கத்துக்கு உள்ளாகிறார்கள்.
உள்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுக்கிறார்கள். ஆனால் உள்நாட்டில் போதியளவு விழிப்புணர்வு இல்லாமை, கல்வி, அறிவு, இல்லாமை, தொழில்வாய்ப்பின்மை போன்றவற்றால் வழி தவறுகிறார்கள்.
அத்துடன் வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொருட்டு வாரத்தில் ஒருமுறை பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டிருக்கிறோம். பாடசாலைகளில் இடம்பெறும் காலைக் கூட்டங்களில் இவ்விவகாரம் தொடர்பாக வைத்தியர்கள் போன்றோர் கருத்துக்களை பகிர முடியும்.
அங்கு மாணவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படவேண்டும். அதனூடாக மாணவர்களின் உளரீதியான விடயங்களைஇபிரச்சினைகளை புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். அத்துடன் தேவைப்படும் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க வைத்தியர்கள் உள்ளடங்களாக ஆலோசனைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த உறவு கட்டியெழுப்பப்படவேண்டியுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையில் சுமுகமான உறவு காணப்படுகிறது. அவர்களினூடாக மக்கள் பிரச்சினையை பொலிஸாருக்கு கொண்டுசெல்ல முடியும். அதன் முதற்கட்டமாக பொலிஸாருக்கும் மாகாண அமைச்சுக்கும் இடையில் காத்திரமான உறவு கட்டியெழுப்பப்பட வேண்டியது குறித்து நான் பொலிஸ்மா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் எமது மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் குழுவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பிலும் ஆராய்ந்திருக்கிறோம்.என்றார். இதன்போது யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமையை சொல்ல முடியுமா? என முதலமைச்சரிடம் உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கேட்டதற்கு பதிலளித்த வடக்கு முதல்வர்,
எமது மாகாணத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை நாம் விரும்புகிறோம். கிட்டத்தட்ட 150000 இராணுவத்தினர் அங்கு இருக்கிறார்கள். . அவர்கள் என்னை சந்திக்க வருவதும் உண்டு. 6 சிவிலியன்களுக்கு ஒரு இராணுவ வீரர் வீதம் உள்ளனர்.
இது எமக்கு பாரிய தடையாக உள்ளது. நீண்டகாலமாக இராணுவத்தினர் இருப்பதால் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்புக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களில் எனது நண்பர்களும் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் வர்த்தகம் செய்கின்றனர். மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். இது யாழ்ப்பாணத்தின் மக்கள் வாழ்க்கைக்கு பாரிய தடையாக உள்ளது.
யாழில் மாணவி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அச்சம்பவத்தினால் மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த சம்பவம் நடத்தப்பட்ட கொடூர முறை தொடர்பில் அவர்களுக்குள் அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் அரசியல் தலையீடுகளும் இருந்தன. கடந்த தேர்தலில் தோல்வியுற்ற சிலர் இப்பிரச்சினையை பூதாகரமாக ஆக்குவதற்கு முயற்சித்தார்கள்.
நீதிமன்றுக்கு கல் எறிவதற்கு யார் விருப்பப்படுவார்கள்.? அது குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற சிலரின் முயற்சி. அவ்வாறானவர்களின் செயற்பாடுகள் காரணமாக அங்கு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 130 பேர் கைது செய்யப்பட்டார்கள்.இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்என்றார்