இலங்கையில் தனித்தமிழீழ ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக மங்கள சமரவீர, சொல்ஹெய்ம் மற்றும் இமானுவேல் பாதிரியார் தலைமையில் புலி ஆதரவாளர்களின் சர்வதேச பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மஹிந்த அணி ஆதரவு எம்.பியான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓரினச் சேர்க்கைக்கு ஐ.நா.வில் ஆதரவு வழங்கிய இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் கலாசாரம் அழிந்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கொழும்பு நாரஹேன்பிட்டி அபேராம விகாரையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் உரையாற்றும் போதே விமல் வீரவன்ச எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
அரசாங்கத்துடன் சுமந்திரன் பேச்சுவார்த்தைகளை நடத்தி கடுமையான குற்றங்களில் குற்றவாளிகளான 300 விடுதலைப்புலி பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.
மறுபுறம் இலங்கையில் தனித் தமிழீழத்தை உரு வாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படு கின்றன.இதற்காக வெளிநாடுகளில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மங்கள சமரவீர நோர்வேயின் சொல் ஹெய்ம் மற்றும் இம்மானுவேல் பாதிரியார் உட்பட புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.இதற்காக இங்கு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை நியமித்துள்ளனர்.
இறுதி கட்ட யுத்தம் தொடர்பாக உள்நாட்டு விசாரணை என்ற பெயரில் யூ.என்.எச்.சி.ஆர்.தலைமையின் கீழ் எமது படையினருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைகளின் இறுதியில் வடக்கில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற தீர்மானமே எடுக்கப்படும்.இதன் பின்னர் தமிழர்கள் பிரிந்து தனியாக வாழ வேண்டும் என்ற கோரிக்கைக்கு சர்வதேசம் ஆதரவு வழங்கும்.
அதன் பின்னர் சர்வதேசத்தின் ஆதரவுடன் தனித் தமிழீழ ராஜ்ஜியம் உருவாகும்.இதற்காகவே அரசாங்கம் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரனின் ஆதரவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு நாட்டை பிரிக்கும் பயங்கரமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதோடு நான்கு இலட்சம் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு இலங்கையில் பிரஜாவுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்ட நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்கு தாரைவார்ப்பதற்கான நட வடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஓரினச் சேர்க்கை
எமது நாடு கலை, கலாசார, பண்பாடு மிகுந்ததாகும். இன்று அதற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஐ.நா.வில் ஓரினச் சேர்க்கைக்கு இவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இது எமது நாட்டின் கலாசாரத்தை அழித்தொழிக்கும் ஏற்பாடாகும். இதற்கு இடமளிக்கப் போகின்றீர்களா? அடுத்த தேர்தலில் இந்த அரசாங்கம் வெற்றி பெற்றால் நாடு பிரியும் எமது கலாசாரம் சீரழியும் என்று தெரிவித்தார்.