ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு பயணமாகவுள்ளார் என்று ஜனாதிபதி தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாளை (05.04.2023) அல்லது நாளை மறுதினம் (06.04.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு பயணத்தை மேற்கொள்வார் என ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப்பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி டெல்லிக்கு விஜயத்தை மேற்கொள்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட டெல்லி ஆர்வமாக இருப்பதாக இந்தியத் தரப்பு குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்குப் பயணத்தை மேற்கொள்வதற்கு பல முயற்சிகளைச் செய்துள்ளார். ஆனால், அவரை வரவேற்க இந்தியா விரும்பியிருக்கவில்லை. இதனால், இந்த சந்திப்பு நிகழவில்லை.
எனினும், அண்மைக்காலமாக ரணில் விக்ரமசிங்க – இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொறகொட முன்னெடுத்த முயற்சிகளால் இந்தியா ஜனாதிபதிக்கு அழைப்பை அனுப்பிய தாகக் கூறப்படுகின்றது.
பிரதமர் மோடியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் போது மாகாண சபை தேர்தலுக்கான திகதி மற்றும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமறைப்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் திட்டங்கள் குறித்தும் அறிவிக்க உள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.