ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக எதிர்பார்ப்பதில் தவறில்லை – அமைச்சர் பந்துல

”ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை” அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதால், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை நேர்மையாகவும், துணிச்சலாகவும் செய்யக்கூடிய தலைவராக விளங்குகின்றார்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை வேட்பாளராக எதிர்பார்ப்பதில் தவறில்லை. நாட்டை வீழ்ச்சியடைந்த இடத்தில் இருந்து சாதகமான திசைக்கு கொண்டு செல்லும் பணியை செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தான் முக்கிய வேட்பாளரா?’ என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றவில்லை, ஆனால் இந்த நேரத்தில் கட்சி மற்றும் நாட்டுக்கு விசுவாசமான எவருக்கும் முக்கிய சவாலான பணி நாட்டை கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டும், மேலும் ரணில் விக்கிரமசிங்க தனது ஆதரவை வென்றுள்ளார். எனவே, நாட்டுக்கு நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைப்பதில் தவறில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.