ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ருதுராஜ் கெயிக்வாட் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
டேவன் கான்வே 29 பந்தில் 47 ரன்கள் குவித்தார். ஷிவம் டுபே, ராயுடு ஆகியோர் 27 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணி சார்பில் மார்க் வுட், ரவி பிஷ்னோய் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அதிரடியில் மிரட்டினார்.
அவர் 22 பந்தில் 2 சிச்கர், 8 பவுண்டரி உள்பட 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு கைல் மேயர்ஸ், கே.எல்.ராகுல் ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பூரன் 32 ரன்கள், ஆயுஷ் பதோனி 23 ரன்கள், ஸ்டோய்னிஸ் 21 ரன்கள், கே.எல்.ராகுல் 20 ரன்கள் எடுத்தனர்.
இறுதியில், லக்னோ அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்புத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சென்னை அணி சார்பில் மொயீன் அலி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.