பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று(28.03.2023) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,“பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே நடைமுறையில் இருக்கின்றது. இது அனைவருக்கும் தெரிந்திருக்கின்றது.
ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.
மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக தற்போதைய ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். ஐரோப்பிய சங்கத்திற்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
2018 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள். இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல.
இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது.
ஆகையினால் இந்த மோசமான சூழலிலே இப்படியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒரு விசேட சட்டத்தை கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்குமான செயற்பாட்டிலே அரசாங்கம் இறங்கி இருக்கின்றது.
இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்.”என தெரிவித்துள்ளார்.