துருக்கியில் கடந்த மாதம் இதுவரை இல்லாத அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. 45 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்து விட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து உள்ளனர். நில நடுக்கத்தில் இருந்து அந்த நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்த சூழ்நிலையில் அந்த நாடு பொது தேர்தலை சந்திக்க இருக்கிறது. வருகிற மே மாதம் 14-ந் தேதி அதிபர் பதவிக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக நிலநடுக்கத்தால் பெரிதும் உருக்குலைந்த 10 மாகாணங்களில் இந்த பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப்எர்டோகன் மீண்டும் வெல்வாரா? என்ற கேள்விக்குறி உள்ளது. ஏனென்றால் நிலநடுக்கத்தின்போது அவர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் செல்லவில்லை என்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. கடந்த தேர்தலின்போது அவர் 55 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல பாராளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சிக்கு அதே அளவு வெற்றி கிடைத்தது. ஆனால் இம்முறை நில நடுக்கம் நடந்து 3 மாதத்தில் பொது தேர்தல் வருகிறது. இதனால் இதன் தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிபர் தேர்தலில் தயீப் எர்டோகன் மறுபடியும் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்கும் என எர்டோகன் நம்பிக்கையுடன் உள்ளார். நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு பதில் புதிதாக சிறந்த கட்டிடங்களை கட்டி கொடுக்க இருப்பதாக எர்டோகன் தெரிவித்து உள்ளார்.