கைவிடப்பட்ட நீரேந்து பிரதேச விவசாயக் காணிகள்,விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் – தேசிய காங்கிரஸ் தலைவர்

கைவிடப்பட்ட நீரேந்து பிரதேச விவசாயக் காணிகள்,விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

தேசிய காங்கிரஸ் தலைவர்
ஏ.எல்.எம் அதாஉல்லா (பா.உ)

உணவு உற்பத்தி மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இராஜாங்க அமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ தலைமையில் அம்பாரை கச்சேரியில் 2023.03.02ம் திகதி (இன்று) நடைபெற்றது. இதில் அம்பாறை மாவட்ட இணைப்புக் குழு
தலைவர் டீ. வீரசிங்க பா.உ, மாவட்ட செயலாளர், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், மற்றும் திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லா கல்லோயா திட்டம் மூலம் நீரேந்து பிரதேசமாக காட்சி தரும் சம்புக்களப்பு காணி அதன் வடிச்சல் தொடர்பாகவும் முறையான திட்டத்துடன், தில்லையாற்றுக்கு உரித்தான பிரதேசம் அடையாளம் காணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கும் வெள்ள அபாயம் போன்றவை தீர்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் .

இதன் மூலம் சுமார் 70 வருட கால சம்புக்களப்பு சதுப்பு நில விவசாயக் காணிகள் நிரந்தரமாக பயிர் செய்கை செய்யக் கூடிய விவசாயக் காணிகளாக மாறுவதற்கான சாத்தியங்கள் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

சம்புக்களப்பு காணி என்பது எமது
மூதாதையர்களின் அபிலாசையாகும் அதற்காகவே நிமால் சிறிபாலடி சில்வா நீர்ப்பாசன அமைச்சராக இருக்கின்ற வேளை தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்து மத்தியரசு மற்றும் மாகாண சபை மூலம் 2012ம் ஆண்டில் அட்டாளைச்சேனையில் சம்புகளப்பு அகழும் பணியினை தொடங்கியிருந்தேன்.இன்றும் அந்த பணிகளை செய்வதற்கான இயந்திரம் அக்கரைப்பற்று மாநகர சபையில் உள்ளது அதற்க்கான எரிபொருட் செலவினை நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்குவதன் மூலம் சம்புக்களப்பு பிரச்சினை நிரந்தரமாக தீர்ந்து விடும் என்றார்‌.

மேலும், தில்லையாற்றின் அளவு முறையாக நிரந்தரமாக தீர்மானிக்கப்பட்டு கல்லோயா திட்டமூலம் உருவான கழிவுகளை விவசாய செய்கைக்கு பாதிப்பில்லாத வகையில் அகற்றி ஆறு செல்வதற்கான திட்டத்தினை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நன்னீர் மீன் வளர்ப்பு, சிறுகைத்தொழில் மற்றும் உள்ளூர் சுற்றுலாத்துறை என்பன விருத்தி காணும் இதனால் மக்களின் வாழ்வு சிறப்பதுடன் பொருளாதாரமும் விருத்தி காணுமென்று பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லா கேட்டுக்கொண்டார்.

மேற்படி கருத்துரைகளை சபை ஏற்று அதனை சீர்செய்வதற்கான பணிகளை விரைவாக நடைமுறைப்படுததுவதாக உறுதி பூண்டது.