62 மணித்தியால போராட்டத்திற்கு பின்னர் மூவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர், பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் மாத்திரம் 14,000 பேரும் சிரியாவில் 3,162 பேரும் பலியாகி உள்ளனர்.  

இந்த நிலையில் 25 வயதாகும் ஃபத்மா டெமிர் என்ற பெண்ணும் அவரது சகோதரி மெர்வேவும் புதன்கிழமை இரவு மீட்புப் படையினரால் உயிரோடு மீட்கப்பட்டனர். நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 62 மணித்தியால போராட்டத்திற்கு பிறகு இரண்டு பெண்கள் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.  அடுக்குமாடி கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 8 வயது சிறுவனும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 

துருக்கி, சிரியாவில் கடந்த 6 ஆம் திகதி 7.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. 

இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் இரவும் பகலுமாக நடைபெற்று வருகின்றன.

கடுங்குளிராலும் நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ளதாலும் இடிபாடுகளில் சிக்கியவா்கள் உயிா் பிழைப்பது கடினம் என கூறப்படுகிறது.

துருக்கியில் நிலவும் ‘மைனஸ் 6’ டிகிரி செஸ்சியஸ் குளிரால் படுகாயமடைந்தவா்களும் பனியில் உறைந்து உயிரிழப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் பெரும்பாலான பகுதிகளில் மீட்புப் பணிகள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

துருக்கியின் மலாட்யா நகரத்தின் சாலையின் இருபுறங்களிலும் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு நிலவும்  கடும் குளிரால், படுகாயமடைந்தவா்கள் பனியில் உறைந்து உயிரிழப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.