அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் .. கவலைப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல் .. உண்மை வெளிச்சத்திற்கு வந்தது..

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்
கவலைப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதல்
உண்மை வெளிச்சத்திற்கு வந்தது

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்

1) “நிச்சயமாக எனது இரட்சகன் அவன் நாடுகின்ற ஒன்றின்பால் விவகாரங்களை நுணுக்கமாக நகர்த்தும் வல்லமை கொண்டவனாக இருக்கிறான்” (08:100)

பலமும் வளமும் தங்களது கைகளில் இருப்பதாகக் கருதுகின்றவர்கள் தாமே அனைத்தையும் நகர்த்தும் வல்லமை கொண்டவர்களாக இருக்கிறோம் என்று நினைக்கிறார்கள். இறுதியில் அல்லாஹ் நகர்த்திய இடத்திற்கே அனைவரும் வந்து சேருகின்றார்கள். உலகிலும் நியதி அது தான், மறு உலக நியதியும் அது தான். இந்த உண்மையை அறிந்தவர்கள் எந்த விடயத்திலும் பின்வருமாறு பிரார்த்திக்க தவற மாட்டார்கள்.

“இறைவா! எமது விவகாரங்கள் அனைத்தினதும் முடிவுகளை சிறப்பானதாக ஆக்கிவைப்பாயாக! உலகம், மறுமை இரண்டினதும் இழிவுகளிலிருந்து எம்மை காத்தருள்வாயாக!”

இந்த பிரார்த்தனையை அங்கீகரித்து முடிவுகளை சிறப்பானதாக ஆக்கி வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.. அல்ஹம்துலில்லாஹ்….

2) மாநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “சிறந்த பெறுபேறு பெரிய சிரமங்களுடனேயே இருக்கிறது”

வேண்டாத ஒரு சிரமத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் சமூகத்தின் பல்வேறு தரப்பினர்களுக்கும் ஏற்பட்டது. நானும் அத்தகையதொரு நிர்ப்பந்தத்துக்கு ஆளாகினேன். உண்மையில் அது பெரும் சிரமமாகவே இருந்தது; அந்த சிரமத்தில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று கூறி எண்ணற்றவர்கள் ஆறுதல் கூறி பிரார்த்தனையும் செய்தார்கள்; நேற்று (2023/02/08) வெளியான நீதிமன்ற முடிவு நான் உட்பட அத்தகைய அனைவருக்கும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ். பக்கபலமாக இருந்த அந்த நல்லுள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

சிரமங்களுக்கு முகம் கொடுத்து வாழ வேண்டுமென்பது உலக நியதியாக இருந்த போதிலும் இது போன்ற வேண்டாத சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய பரிதாபம் மற்றொருவருக்கு வரக்கூடாதென்பதே எனது பிரார்த்தனை.

இன்றைய சூழலில் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளும் கூட அவர்கள் மீது திணிக்கப்பட்ட வேண்டாத சிரமங்களே. இத்தகைய சிரமங்கள் அனைத்திலிருந்தும் நாட்டையும் மக்களையும் அல்லாஹ் விடுவிக்க வேண்டும்.அதுவே நிறைவான விடுதலை.

3) “அநீதி இழைக்கப்பட்டவரது பிரார்த்தனைக்கும்; அல்லாஹ்வுக்கும் இடையில் திரையில்லை” என மாநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அநீதி இழைக்கப்பட்டவரது குரல் மிகவும் பலம் வாய்ந்தது என்ற உண்மை இந்த நபி மொழியில் உணர்த்தப்பட்டிருக்கறது.

அந்தக்குரல் அல்லாஹ்விடம் பெரு மதிப்பற்குரியதாக இருப்பது போலவே உண்மையையும் நீதியையும் ஆசிப்போரிடமும் அந்தக்குரல் பெறுமதிமிக்கதாகவே இருக்கிறது. அதனால் தான் உலகில் நீதி வாழ்கின்றது.

அசிங்கங்களை வியாபாரமாக்கி விளம்பரம் தேடுகின்ற பத்திரிகைகள் சிலவும் அரசியல் ஆதாயம் தேடுகின்ற அரசியல்வாதிகள் சிலரும் பேசுவதற்கு நாளாந்தம் தலைப்பு தேடுகின்றவர்கள் சிலரும் கண்மண் தெரியாமல் பேசித்திரிகின்ற அபாண்டங்களும் கட்டி விடும் அவதூறுகளும் அறியா மக்களுக்கு சில போது வேத வாக்குகளாகி விடுவது நாட்டு நடப்பாகிவிட்டது.

நீதிமன்றத் தீர்ப்பு நான் நிரபராதி என்பதை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துவிட்டது. நீதித்துறையின் சுதந்திரத்தில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. நீதியை நிலைநாட்டும் தனது பொறுப்பை நீதித்துறை கச்சிதமாக நிறைவேற்றும் என்பது எனது அவாவும் பிரார்த்தனையுமாகும்.

பொய்களையும் அவதூறுகளையும் எரிபொருளாகக் கொண்டு தமது வண்டியை ஓட்ட விரும்புகின்றவர்கள் நீண்ட தூரம் சுகமாக பயணிக்க முடியாது என்பதை வரலாறு எத்தனை முறை நிரூபித்தாலும் அதனை செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள. நீதியும் அதற்கெதிராக தொழிற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

அநீதி இழைக்கப்பட்ட அனைவருக்கும் அந்த நீதி ஓரு நாள் கிடைத்தே தீரும். அந்த நீதி அவர்களுக்கு கிடைக்கும் நாளை நெருக்கமாக்கி வை இறைவா! என்று மனமுருகி பிரார்த்திக்கின்றேன்

2023/02/09