திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள் செய்து நடத்துவது வழக்கம். முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நட்சத்திர விடுதி, கடற்கரை ரிசார்ட், அரங்கங்களில் பிரமாண்டமான முறையில் திருமண விழாக்கள் நடத்தி வருகிறார்கள்.
தற்போது புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது. ஸ்கூபா டைவிங், பாராசூட் திருமணம் என வாழ்வில் மறக்க முடியாதபடி பிரம்மாண்டமாக தங்களது திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த வகை திருமணங்கள் பலருக்கு ஆச்சரியமாகவும், பிரமிக்க வைப்பவையாகவும் உள்ளது. இதற்கு முன்பு கடலுக்கு அடியில் திருமணம் செய்வது கோவாவில் அதிகளவில் நடந்து வந்தது. தற்போது இதுபோன்ற திருமணங்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரையில் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் விமான நிலையத்தில் இருந்து குறைந்த நேர பயணம், இடையூறு இல்லாத வாகன போக்குவரத்து, முக்கியமாக பாதுகாப்பு உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன. கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து அதிக அளவு புதுமண ஜோடிகள் வருவதாக இதற்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.