அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவைக்கும் நோக்கில் பேச்சுக்கள் நடப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இலங்கை தலைவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், அமெரிக்க ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இவ்வருடம் இலங்கைக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, இலங்கை அரசாங்கம், ஒபாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தததை உறுதி செய்தார். புதிய இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் விடயத்தில், அமெரிக்காவுடன் ஒத்துழைக்க ஒப்புக்கொண்ட பின்னர், பலவீனமாக இருந்த இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவு சீரடைந்தது.
இவ்வருடம் ஜனவரியில் பதவிக்கு வந்ததிலிருந்து சகல நாடுகளுடனும் அரசாங்கம் இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தியுள்ளதாக பெரேரா கூறினார். இவ்வருடம் முடிவுற முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பியை மீள பெறுவதிலும் இலங்கை மீன் ஏற்றுமதி தொடர்பான தடையை நீக்குவதிலும் அரசாங்கம் நம்பிக்கையோடு உள்ளதாக அவர் கூறினார்.