சிரியாவில் குண்டடிபட்டு மரணிக்கும் தறுவாயில் இருந்த ஒரு சிறுவன் தன் உயிர் பிரிவதற்கு முன்னர் தன்னைச் சுற்றி நின்ற வைத்தியர்களைப் பார்த்து, ‘நான் இறந்த பிறகு உங்களைப் பற்றியெல்லாம் இறைவனிடம் முறையிடுவேன், இங்கு நடந்த (அநியாயங்கள்) எல்லாவற்றையும் சொல்வேன்;’ என்று கூறினான்.
எந்த உதவியும் இன்றி, உயிரின் கடைசி வினாடிகளை எண்ணிக் கொண்டிருந்த அந்த சிறுவனின் வார்த்தைகள் ஒரு ஏவுகணையை விட பலமானவை. அவை இன்று வரையும் உலக உலுக்கிக் கொண்டுதானிருக்கின்றன.
கொழும்பில், பிறந்து இருபது நாட்களேயான ஒரு பச்சிளம் குழந்தை மரணித்த போது, அக்குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றது என்ற காரணத்திற்காக, அந்த பிஞ்சு உடலும் எரிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து, சிரிய சிறுவனின் கடைசி வார்த்தைகள்தான் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சிசுவும் மனதில் இப்படித்தான் நினைத்திருக்குமோ என்ற எண்ணமும் வந்து வந்து போகின்றது.
இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக (இக் கட்டுரை எழுதி முடிக்கப்படும் வரைக்கும்) 144 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நிலத்தில் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு 8 மாதங்களாக 16 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட முஸ்லிம் சமூகம் கோரி வருகின்ற போதும், அரசாங்கம் இன்னும் மனமிரங்காத சூழலில், இதுவரை உயிரிழந்த அனைத்து முஸ்லிம்களின் ஜனாஸாக்களும் தகனம் செய்யப்;பட்டுள்ளன.
ஆனால், இவ்வுலகுக்கு வந்து 20 நாட்கள் மட்டுமேயான மலர்;ந்தும் மலராத ஒரு மலரை அல்லது இன்னும் கண்திறவாத மொட்டுப் போன்ற பச்சிளம் குழந்தையின் உடலை எரித்தமையானது, முன்னைய சுமார் 80 ஜனாஸாக்களையும் எரித்த போது இல்லாத வலியையும் வேதனையையும் இ;ந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.
எரிக்கப்பட்ட சிசு
எல்லா இனங்கள், மதங்களிலும் குழந்தைகள் ஒரு வரம் என்கின்றார்கள். பிள்ளைப்பேறு என்பது ஒரு மிகப் பெரிய பாக்கியம் என்று கூறுகின்றார்கள். அந்தப் பாக்கியம் கிடைக்காதவர்களுக்கே அதன் வலியும் உள்மன அழுகையும் புரியும். அந்தவகையில். கொழும்பு 15 இல் வாழும் திருமணமாகி 6 வருடங்களாக குழந்தையொன்றுக்காக இவ்வாறு ஏங்கித் தவித்த முஸ்லிம் இளம் பெற்றோருக்கு பிறந்த குழந்தையே சிகிச்சைக்காக கொழும்பு – சீமாட்டி றிட்ஜ்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காத நிலையில் உயிரிழந்தது.
அந்த பச்சிளம் குழந்தைக்கும் கொவிட் வைரஸ் தொற்று இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், குழந்தையின் ஜனாஸாவை தம்மிடம் தருமாறும் அதனை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்குமாறும் அதன் பெற்றோர் வேண்டிக் கொண்டனர்.
தவமிருந்து பெற்ற பிள்ளையின் உயிரைக் காப்பாற்றத்தான் நம்மால் முடியாமல் போய்விட்டது, இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யும் ஆறுதலாவது கிடைக்கட்டும் என்ற அடிப்படையில், ஜனாஸாவை வழங்குமாறு அவர்கள் மன்றாட்டமாக கோரி நின்றனர்.
நினைத்துப் பாருங்கள்! திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை கிடைக்குமென்றால் அந்தக் குழந்தை தொடர்பாக தாயும் தகப்பனும் எவ்வளவு எதிர்பார்ப்புடன் இருந்திருப்பார்கள். அந்த பிள்ளையை முழுக் குடும்பமும் எந்தளவுக்கு கண்ணுக்குள் வைத்து பாதுகாத்திருப்பார்கள்.
இந்நிலையில், அக்குழந்தை மரணிக்கின்றது என்றால் அந்தப் பெற்றோர் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தமது மத வழக்கத்தின் படி இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளவே விரும்புவர் என்பது சர்வ சாதாரணமானது.
எனவே, இஸ்லாமிய வழக்கத்தின்படி தமது சின்னஞ்சிறு பிள்ளையை அடக்கம் செய்ய வேண்டும் என்பதில் அக்குடும்பம் விடாப்பிடியாக இருந்தது. அதற்காகவே, பிள்ளையின் ஜனாஸா எரிக்கப்படுவதற்கான ஆவணத்தில் தந்தை ஒப்பமிடாமல் இருந்தார்.
அதிகாரத்தில்; உள்ளவர்களும் அதிகாரிகளும் ஏதாவது ஒரு அடிப்படையில் இந்தக் குழந்தையை நல்லடக்கம் செய்ய இடமளிப்பார்கள் என்ற கடைசி நம்பிக்கை முஸ்லிம் சமூகத்திற்கும் இருந்தது.
ஆனால், கடைசியில் அந்த நம்பிக்கை வீண்போனது. முஸ்லிம்களும், அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களும் அதேபோல் பிள்ளைகள் விடயத்தில் அதீத அன்பு கொண்ட சிங்கள மக்களும் எது நடந்து விடக் கூடாது என்று உள்ளுக்குள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்களோ அது நடந்தே விட்டது.
உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் 19 முஸ்லிம்களின் ஜனாஸாக்களுடன் சேர்த்து, இந்த குழந்தையின் பிஞ்சுடலும் எரிக்கப்பட்டாயிற்று. இக்குழந்தையின் உடலை மட்டுமேனும் நல்லடக்கத்திற்கு வழங்க நினைத்திருந்தால், அதை எப்படிச் செய்வது என்பதற்கான சூட்சுமங்களை அரசாங்கமும் அதிகாரிகளும் நன்கு அறியாதவர்களல்லர். ஆனால் அவ்வாறான அபூர்வங்கள் நடக்கவில்லை.
மாறாக, இக் குழந்தை விடயத்திலும் தனிமைப்படுத்தல் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. இலங்கைச் சூழலில், அரசியல்வாதிகளுக்காகவும் செல்வாக்கு மிக்கவர்களுக்காகவும் வளைந்து கொடுக்கின்ற சட்டம், முஸ்லிம்கள் விடயத்தில் அதுவும் குறிப்பாக இந்தப் பிஞ்சுக் குழந்தைக்காக இரங்கவில்லை என்ற விடயம் ஆச்சரியத்தை விடவும் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையி;ன் கருத்து
குழந்தையின் தந்தை எம்.எஸ்.எம்.பாஹிம் இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
”கடந்த 18.11.2020 இல் பிறந்த ஆண்குழந்தைக்கு ஷாயிக் பாஸ் எனப் பெயர் வைத்தோம். ஆரம்பத்தில், ஆரோக்கியமாக இருந்த குழந்தைக்கு பின்னர் சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதனையடுத்து, தெமட்டகொடையில் உள்ள ஒரு வைத்தியரிடம் குழந்தையை கொண்டு சென்று மருந்து எடுத்தோம்.
ஆயினும் நோய்நிலைமை அதிகரிக்கவே கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம். எனக்கும் மனைவிக்கும் குழந்தைக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டனர். குழந்தைக்கு மட்டும் பொசிடிவ் என முடிவு வந்தததாக கூறினர்.
பிள்ளைக்கு மட்டும் எவ்வாறு பொசிடிவ் வந்தது என்ற கேள்வியை கேட்டோம். இவ்வாறிருக்கையில் குழந்தைக்கு தேவையான சிகிச்சையை அளித்த வைத்தியர்கள், செவ்வாய் அதிகாலையில் ஐ.சி.யு.விற்கு மாற்றினர். எம்மை வீட்டிலேயே இருக்குமாறும் வேறு யாரையேனும் அனுப்புமாறும் கூறினர்.
செவ்வாய் மாலை 5.30 இற்கு குழந்தையை விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போதே 4 மணிக்கு குழந்தை இறந்துவிட்ட செய்தி எமக்குச் சொல்லப்பட்டது.
வைத்தியசாலைக்கு சென்ற போது, குழந்தைக்கு பொசிடிவ் என்பதால் தர முடியாது என்று கூறினர்.
எனவே அவர்கள் தந்த ஆவணத்தில் நான் கையொப்பமிடவில்லை. தனியார் வைத்தியசாலையில் இன்னுமொரு பி.சி.ஆர்.எடுத்து பார்ப்போம் என்று நான் கூறிய போதும் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.
மறுநாள், பிள்ளையை எரிக்கப் போவதாக பிரேத அறையில் இருந்து அழைப்பு வந்தது. எனது மச்சானும் சகோதரரும் சென்று ஜனாஸாவை தருமாறு வாடிதாடினர். அவர்கள் கொடுக்கவில்லை. பின்னர், பிள்ளையின் ஜனாஸாவை பொரளை கனத்தையில் எரிக்கப் போவதாக அறிவித்தல் கிடைத்து,
அங்கு செல்வதற்கு முன்னதாக அவர்கள் எரித்து விட்டார்கள். இந்த வலி மிகக் கொடுமையானது. ஆதை வாhத்தைகளால் வர்ணிக்கவே முடியாது. இவ்வாறு எரிக்கப்படும் கடைசிக்கு குழந்தை எனது குழந்தையாகவே இருக்க வேண்டும்’ என்று அழுகையுடன் கூறியுள்ளார்.
பிறந்து இருபதே நாளான ஒரு சிசு இவ்வாறு மரணித்து, இஸ்லாமிய சமய விதிமுறைகளுக்கு புறம்பாக எரியூட்டப்பட்ட செய்தி இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரணம் நிகழ்;ந்தது போல முஸ்;லிம்கள் உணர்;ந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஒரு கொடூரமான ஒரு மனவலியை முஸ்லிம் சமூகம் அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் அனுபவித்திருக்குமோ என்றும் தெரியாது.
புறக்கணிக்கப்பட்ட கோரிக்கை
இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக மரணிக்கும் அல்லது மரணித்த பின்னர் தொற்று உறுதி செய்யப்படும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக நிலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்குமாறு முஸ்;லிம் சமூகம் ஆரம்பத்தில் இருந்து நெடுங்காலமாக கோரி வருகின்றது.
அரசாங்கம் முன்னிறுத்தும் எந்த நிபுணரினாலும் மறுதலிக்கவோ, பிழையென நிரூபிக்கவோ முடியாத பல நியாயங்களையும், விஞ்ஞானபூர்வ காரணங்களையும் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி சிங்கள ஆய்வாளர்களும் முன்வைத்துள்ளனர்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன், நினைத்ததை முடிக்கக் கூடிய சர்வ வல்லமையையும் கொண்டுள்ள ராஜபக்ச அரசாங்கத்தால் இக்கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. அதனை எதுவோ தடுக்கின்றது.
ஆரம்பத்தி;ல், சுகாதார அமைச்சு, அரசாங்கம் என்பன முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் நீதி தேவதையிடம் அடைக்கலம் தேடிய முஸ்லிம்களின் கைகளை நீதி தேவதை உதறிவிட்டாள்.
இதன் காரணமாக வேறு வழியின்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் ஆட்சியாளர்களிடம் சென்றுள்ளனர். இதுபற்றிய தகவல்கள் சில காரணங்களுக்காக வெளியில் பிரசாரப்படுத்தப்படவில்லை.
இருப்பினும், முஸ்லிம் எம்;.பி.க்கள் கடந்த சில தினங்களாக பிரதமர் உள்ளிட்ட உயர் மட்டங்களை சந்தித்துள்ளனர். அத்துடன், ஜனாஸா நல்லடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சக்திகளுக்கும் விளக்கமளித்துள்ளதாக தெரியவருகின்றது.
நூதனப் போராட்டம்
இதற்கிடையில், தலைநகரில் சில முஸ்லிம் குடும்பங்கள், ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்கான ஆவணத்தில் ஒப்பமிடுவதும் இல்லை, சடலப் பெட்டி வாங்க பணம் கொடுப்பதும் இல்லை என்ற ஒரு நூதனப் போராட்டத்தை சமூக சிந்தனையுடன் ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு 19 இற்கு மேற்பட்ட ஜனாஸாக்களை அவர்கள் பொறுப்பேற்காமலேயே ஒரு ஓர்மத்துடன் இருந்தனர்.
ஆனால், இந்த ஜனாஸாக்கள் அனைத்தும் பின்னர் அரச செலவில் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதில் மேற்சொன்ன பச்சிளம் குழந்தையும் உள்ளடங்குகின்றது. ஆக, இந்த நூதன போராட்டத்தின் நோக்கத்தை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை.
தனது தந்தையின், தாயின், சகோதரரின், பிள்ளையின் உடலை வைத்து ஒரு போராட்டத்தை மேற்கொள்கின்றார்கள் என்றால், அந்த உரிமையை அவர்கள் எந்தளவுக்கு அவாவி நிற்கின்றார்கள் என்பதை ஆட்சியாளர்களும் நிபுணர்குழுவும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்றுதான் கருத வேண்டியுள்ளது.
இந்தப் பி;ன்னணியிலேயே இப்போது அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் மேலும் மும்முரமடைந்துள்ளன. அத்துடன் சாணக்கியன் எம்.பியின் உரையுடன் முஸ்லிம் எம்.பி.க்களின் பாராளுமன்ற செயற்பாடுகள் ஒப்பிட்டு விமர்சிக்கப்பட்ட சூழலில், இப்போது முஸ்லிம் எம்.பி.க்களும் சபையில் வாய் திறந்து பேசத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் நீண்ட நாட்களுக்குப் பிறகு காத்திரமான உரையொன்றை நிகழ்த்தியிருக்கின்றார். மக்கள் காங்கிரஸ் கட்சியின் இஷாக் ரஹ்மான், தே.கா. தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, மற்றும் முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பிக்கள் இவ்விடயமாக பேசியுள்ளனர். இது அவர்களின் கடமையாகும்.
இதேவேளை, சாணக்கியன் எம்.பிக்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன், கஜேந்திர குமார் பொன்னம்பலம் என தமிழ் எம்.பிக்கள் முஸ்லிம்களின் குரலாக ஒலித்துள்ளனர். இவ்வாறு சகோதர தமிழ் எம்.பி.க்களும் ஓரிரு சிங்கள அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புகின்றமை முஸ்லிம் சமூகத்திற்கு ஆறுதலிளிப்பதாக அமைந்துள்ளது.
பிரதமருடனான சந்திப்பு
இது இவ்வாறிருக்க, நிபுணர் குழுவின் அறிக்கையை விரைவுபடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவுறுத்தியிருந்த நிலையில், அவரை முஸ்லிம் எம்.பி.க்கள் கடந்த வியாழன் இரவு பிரதமர் சந்தித்துள்ளனர். பிரதமர் மற்றும் உயர்மட்டத்தினருக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் எம்.பி.க்களுக்கும் இடையிலான தொடர் சந்திப்புக்களில் ஒரு அங்கமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில், ஜனாஸாக்களை அடக்குவதற்கு மேடான, நிலத்தடி நீர்மட்டம் ஆழமாகவுள்ள பொருத்தமான இடங்களை அடையாளம் காணுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், இறந்த உடலில் வைரஸ் 36 நாட்கள் உயிர்வாழும் என்று சுகாதார அதிகாரிகள் இக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளளர். எனவே, ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இன, மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என்றும் இதற்கு ஒத்துழைப்பை பெற்றுத் தருமாறு முஸ்லிம் எம்.பி.க்களி;டம் பிரதமர் கோரியதாகக கூறப்படுகின்றமை கவனிப்பிற்குரியது.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில தினங்களுக்கு முன்னர் நடாத்திய சந்திப்பொன்றில் கலந்து கொண்ட ஒரு வைத்தியரின் தகவலின் படி, ஜனாஸா விவகாரமானது மருத்துவ விஞ்ஞான அடிப்படைகளைத் தாண்டி அரசியலாக்கப்பட்டுள்ளதை சங்கத்தின் முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாஸாக்களை அடக்குவதற்கு இடமளித்தால் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்ற விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால், இதில் பாரிய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
இருப்பினும் தற்போதைய நிலைவரப்படி அரசாங்கத்திற்குள் இரண்டு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இருக்கின்றமை புலனாவதுடன், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் “உலக சுகாதார ஸ்தாபனத்தையே விஞ்சிய“ அறிவுசார் நிலைப்பாடுகளையே எடுக்கின்;றனர் என்பதும் வெளிப்படையானது.
ஆனாலும் இப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அரசாங்கத்தின் தார்மீகம்
கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை இலங்கையில் 144 கொவிட் மரணங்கள் பதிவாகியிருந்தன. இதில் குறைந்தது 80 பேர் முஸ்லிம்கள் என அறிய முடிகின்றது. அப்படியாயின், இலங்கையில், 10-12 சதவீதமாக வாழ்கின்ற முஸ்லிம்கள் 55 சதவீத உயிரிழப்பை சந்தித்துள்ளனர். எனவே, மற்றைய சமூகத்தை விட அவர்கள் இவ்விடயத்தில் அக்கறை காட்டுவத யாரும் தவறுகாண முடியாது என்பதுடன், ஒரு சமூகத்தின் உரிமைக் கோரிக்கையை மலினப்படுத்தவும் முடியாது.
இலங்கையில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கின்ற கொழும்பு மாவட்டத்தில் மட்டுமன்றி முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற கிழக்கின் அக்கரைப்பற்று உள்ளிட்ட பல இடங்களிலும் கொவிட்-19 வைரஸ் பரவி வருகின்றது. குறிப்பாக கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பிராந்தியத்தில் 9 மாதக் கைக்குழந்தை முதல்
80 வயதான முதியவர் வரை தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கிழக்கில் முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ள நிலையில், மேலும் உயிரிழப்புக்கள் இடம்பெறக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கொரோனா மரணங்கள் இடம்பெற்றால் அது வேறுவிதமான சிக்கல்களை உண்டுபண்ணும் என்பதையும் மறந்து விடக் கூடாது.
இதனை மனதில் வைத்து முஸ்லிம் எம்.பி.க்கள் இன்னும் முனைப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
அதேபோன்று, அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் இவ்விடயத்தை கையாள வேண்டும். நிபுணர் குழுவில் தகுதியானவர்களையும் இனவாத சிந்தனையற்றவர்களையும் நியமித்து நேர்மையான அறிக்கையொன்றை பெற வேண்டும்.
‘ஜனாஸாவை அடக்குவதற்கு இடமளிப்பது’ என்று ஆட்சியாளர்கள் முடிவெடுத்துவிட்டால் அதற்கான அறிக்கையை பெறுவது எப்படி என்பது அவர்களுக்கு தெரியாத விடயமுமல்ல.
இந்த நாட்டின் சட்டத்தை மதித்தும் சமரசமாகப் பேசித் தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே முஸ்லிம் சமூகம் செயற்படுகின்றது. அதனாலேயே, பிறந்து 20 நாட்களேயான ஒரு பச்சிளம் சிசு உட்பட சுமார் 80 முஸ்லிம்களின் ஜனாஸாக்களை இந்த நெருப்புக்கு பலியாக்கியுள்ளனர். என்பதையும் மறந்து விடக் கூடாது.
இத்தனை நடந்த பிறகும் இப்போது மீண்டும் அரசாங்கத்திடமே முஸ்லிம் சமூகம் வந்திருக்கின்றது.
இந்த நெருப்பு எப்போது அணையும் என்பதே ஒவ்வொரு முஸ்லிமினதும் நிகழ்கால ஏக்கமாக உள்ளது. ஆகவே, ஒரு தனியான இன, மதக் குழுமத்தின் இந்த ஏக்கத்தை அரசாங்கம் போக்க வேண்டும்.
மாறாக, நியாயமற்ற எக்காரணத்திற்காகவும் இதனை தட்டிக்கழிப்பதானது பெரும் வரலாற்றுத் தவறாக அமைந்து விடலாம்.