பாகத்தில் அமெரிக்காவில் தனிநபர் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவதில்லை. மாறாக, மொத்த 598 தேர்தல் கல்லூரி வாக்குகள் மாநிலங்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரினுடைய கட்சி சார்பாக வெற்றிபெறும் தேர்தல் கல்லூரி அங்கத்தவர்களில் எந்த அங்கத்தவர் 270 அல்லது அதற்கு மேற்பட்ட தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்ற ஜனாதிபதி வேட்பாளராவார்; என்பதைப் பார்த்தோம்.
அதேநேரம் தேர்தல் முடிவடைந்து ஒருவர் 270 அல்லது அதற்குமேல் ஆசனங்களைப் பெற்றுவிட்டால் சட்டரீதியாக அவர் வெற்றிபெற்றதாகிவிடாது. இங்கு 270 அல்லது அதற்கு மேல் ஆசனங்களைப் பெற்றவர் “Apparent Winner”- “வெற்றிபெற்றதாக தோற்றுபவர்” என்றே கொள்ளப்படுவார். அந்த அடிப்படையில்தான் “Transition Process- அதிகாரமாற்ற நடவடிக்கை” இடம்பெறுகிறது.
இம்முறை உண்மையான தெரிவு இடம்பெறும்வரை அதிகாரமாற்ற தடவடிக்கையை அனுமதிப்பதில்லை; என்ற நிலைப்பாட்டில்தான் ஜனாதிபதி ட்ரம்ப் இருந்தார். ஆனாலும் விமர்சனங்களைத் தொடர்ந்து தற்போது அதற்கு இடமளித்திருக்கின்றார்.
தேர்தல் கல்லூரியின் தெரிவு
——————————————
தேர்தல் கல்லூரியின் தெரிவுதான் உண்மையான, சட்டரீதியான ஜனாதிபதித் தெரிவாகும். இது தேர்தலின்பின் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாவது புதன்கிழமையின்பின் வருகின்ற திங்கட்கிழமை இந்தத் தேர்வு நடைபெறும். அதன்படி வருகின்ற 14ம் திகதி இத்தேர்வு இடம்பெற இருகின்றது.
தேர்வுமுறை
——————-
முன்னைய பாகத்தில் குறிப்பிட்டதுபோல், தேர்தலுக்கு முன்பே ஒவ்வொரு தேர்தல் கல்லூரி வேட்பாளரும் தாம் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அறிவிப்பார். அதனடிப்படையிலே கல்லூரி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஒரு கல்லூரி வேட்பாளர் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவிக்கின்றாரோ அவரது பெயர்தான் இந்தக்கல்லூரி வேட்பாளரின் வாக்குச்சீட்டில் இருக்கும்.
அதாவது, வாக்குச்சீட்டில் அந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு அளிக்கின்ற வாக்குத்தான் இந்தக் கல்லூரி வேட்பாளருக்குரிய வாக்காகும். இதன் தலைகீழான வாதமும் இருக்கிறது ( சட்டரீதியான வாதம்)
இப்பொழுது வருகின்ற 14ம் திகதி ஒவ்வொரு மாநிலத்திற்குமுரிய தெரிவுசெய்யப்பட்ட கல்லூரி அங்கத்தவர்கள் தத்தமது மாநில தலைநகரில் கூடுவார்கள். அங்கு அவர்கள் “தாம் விரும்பும்” ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். இவ்வாக்குச் சீட்டுக்கள் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் அமெரிக்க காங்கிரசிற்கு அனுப்பப்பட்டு அங்கு எண்ணப்படும்.
இதில் 270 அல்லது அதற்குமேல் வாக்குகளைப் பெறுகின்றவர்தான் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார். யாரும் பெரும்பான்மை பெறாதபோது காங்கிரசிற்குள் தேர்தல் நடைபெற்று ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார். ( அதற்குள் இங்கு விரிவாக செல்ல விரும்பவில்லை)
எனவே, ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை இருதேர்தல்கள் நடைபெறுகின்றன. ஒன்று; மக்கள் வாக்களிக்கும் தேர்தல். அது மறைமுகமாக ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் தேர்தல். இரண்டு;
தேர்தல் கல்லூரித் தேர்தல். இதுதான் நேரடியாக ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் தேர்தல்.
மாறி வாக்களித்தல்
——————————
தேர்தலின்போது ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிப்பதாக அறிவித்துவிட்டு மாறி வாக்களிக்கலாமா? ஆம், சாத்தியம். அதாவது அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் 33 மாநிலங்களிலும் கொலம்பியா மாவட்டத்திலும் அவ்வாறி மாறி வாக்களிப்பதற்கெதிராக சட்டம் இருக்கிறது. இதன் பொருள் 17 மாநிலங்களில் எந்தத் தடையுமில்லை; என்பதாகும். எனவே, அவர்கள் மாறி வாக்களிக்கலாம்.
அந்த 33 மாநிலங்களிலும் பாதி மாநிலங்களில் அந்தத்தடையை அமுல்படுத்த சட்டம் இல்லை. அதாவது அவ்வாறு வாக்களிக்கக்கூடாது; என்று சட்டம் இருக்கின்றது. மாறி வாக்களித்தால் என்ன விளைவு என்பது தொடர்பாக சட்டம் இல்லை. 14 மாநிலங்களில் அவ்வாறு மாறி வாக்களித்தால் அவ்வாக்குகள் செல்லுபடியற்றதாகும். மூன்று மாநிலங்களில் மாறி வாக்களித்தால் அவ்வாறு வாக்களித்தவர்கள் தண்டப்பணம் கட்டவேண்டும்; ஆனாலும் வாக்குகள் செல்லுபடியாகும்.
இதன்பொருள் தற்போது பைடன் வெற்றிபெற்றதாக தோற்றுகின்றபோதும் வருகின்ற 14ம் திகதி தோல்வியடையலாம். இக்கருத்தை அண்மையில் ட்ரம்ப் கூட தெரிவித்திருந்தார்.
இதுவரை அவ்வாறு மாறி வாக்களித்த பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆனாலும் அது, இதுவரை அமெரிக்க வரலாற்றில் தேர்தல் இறுதி முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஆயினும் இம்முறை அவ்வாறான மாற்றம் வந்தாலும் வரலாம்; என்ற ஒரு எதிர்பார்ப்பு ட்ரம்ப் தரப்பினருக்கு இருக்கின்றது. பெரும்பாலும் அவ்வாறு நடக்காது.
நமது நாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆக்கத்தில் குறிப்பிட்டதுபோல் நாம் எடுக்கக்கூடிய கோட்பாடு உலகின் முதலாவது மிகப்பழமையான யாப்பைக்கொண்ட ஜனநாய நாடான அமெரிக்காவிலேயே மக்களின் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ( popular votes) ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவதில்லை. (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவர்தான் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்; என்பது வேறுவிடயம். ஆனால் மாறியும் வந்திருக்கிறது. கடந்தமுறைகூட ட்டரம்பைவிட கிளிண்டனே கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தார்.)
இங்கு மாநிலங்கள் தனித்தனி அங்கங்கங்களாக கொள்ளப்பட்டு அவற்றிற்கு குறிப்பிட்ட பலம் வழங்கப்பட்டு ( தேர்தல் கல்லூரி வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில்) அதன்மூலம்தான் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுகின்றார். அதாவது, பிராந்திய சமூகங்கள் தீர்மானிக்கின்றன. ( 48 மாநிலங்களில் அம்மாநிலத்தில் எந்த ஜனாதிபதி வேட்பாளர் அதிகூடிய வாக்குகளைப் பெறுகின்றாரோ அவரது கட்சியின் மொத்தக் கல்லூரி வேண்பாளர்களும் வெற்றிபெற்றதாக கொள்ளப்படுவார்கள். அதாவது அம்மாநில சமூகம் அவரைத் தெரிவுசெய்கின்றது).
இதன்மூலம் சிறிய மாநிலங்கள் சனத்தொகைப் பலத்தைவிட கூடுதல் பலத்தைப் பெறுகின்றன; என்ற விமர்சனம் இருக்கின்றது. சிறிய மாநிலங்களுக்கு பாதுகாப்பளிக்கின்றது; என்ற ஆதரவுக்கருத்தும் இருக்கின்றது. ( இது தொடர்பான விபரம் நீளம் கருதி தவிர்க்கப்படுகின்றது)
இலங்கையில் மாகாண அடிப்படையில் இதேமுறை பொருந்தாது. ஆனால் ஒவ்வொரு சமூகத்தையும் தனித்தனி அங்கங்களாக கருதி ஒரு புதிய முறைமூலம் ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவது தொடர்பாக சிந்திக்கலாம்.
அமெரிக்காவில் பொதுமக்களின் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தெரிவுசெய்வதாக இருந்தால் மாநிலங்கள் கிழக்கு, மேற்காகப்பிரிந்து பிரதேசவாதம் உருவாகி சில பெரிய மாநிலங்கள் மட்டுமே எப்போதும் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் நிலை உருவாகலாம். அதாவது இலங்கையில் பெரிய சமூகம் தனியாக ஜனாதிபதியை தெரிவுசெய்து சிறிய சமூகங்களை இரண்டாம்தர பிரஜைகளாக நடாத்துவதுபோல் அங்கும் பெரிய மாநிலங்கள் ஒன்றுபட்டு ஜனாதிபதியைத் தெரிவுசெய்து சிறிய மாநிலங்களை இரண்டாம்தர மாநிலங்களாக நடாத்தும் நிலை வரலாம்.
அமெரிக்கா ஒரு சமஷ்டி நாடு. மாநிலங்களுக்கு நிறைய அதிகாரமுண்டு. அவ்வாறு இருந்தும் சிறிய மாநிலங்களையும் பாதுகாக்கும் விதத்தில் ஜனாதிபதித் தேர்தல்தல்முறை அமையும்போது இலங்கையில் வெறும் வாக்கு எண்ணிக்கையை வைத்து ஜனாதிபதியைத் தீர்மானிக்காமல் சிறுபான்மைக்கும் பங்கு வரக்கூடிய விதத்தில் ஏன் நாம் ஓர் தேர்தல்முறையைக் கோரமுடியாது.
தென்னாபிரிக்கத் தேர்தல்முறை
———————————————-
உலகின் மிகமுற்போக்கான அரசியல்யாப்பைக்கொண்ட நாடு என வர்ணிக்கப்படுகின்ற தென்ஆபிரிக்காவில் அமெரிக்கத் தேர்தல்முறைக் கோட்பாட்டிற்கு இணங்கியதான ஒரு கோட்பாட்டுமுறையே கடைப்பிடிக்கப்படுகின்றது; தேர்தல்முறை மாறுபட்டபோதிலும்.
தென்ஆபிரிக்காவில் பாராளுமன்றமே ( தேசிய காங்கிரஸ்) ஜனாதிபதியைத் தெரிவுசெய்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பங்கிடப்படுகிறார்கள்; என்பதே இங்கு முக்கியம். தென்னாபிரிக்கா கறுப்பர்களையும் வெள்ளையர்களையும் கொண்ட நாடு. நீண்டகாலமாக இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடித்து மீண்டநாடு.
மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 400பேர். இவர்களில் 200பேர் தேசிய ரீதியாகவும் அடுத்த 200பேர் மாநில ரீதியாகவும் (9 மாநிலங்கள்) தெரிவுசெய்நப்படுகின்றனர். விகிதாசாரத் தேர்தல்முறை பின்பற்றப்படுகிறது.
தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு கட்சி இரண்டு பட்டியல்களை சமர்ப்பிக்க வேண்டும். தேசியப்பட்டில், மாநிலப்பட்டியல். மக்கள் கட்சிக்கே வாக்களிப்பார்கள். கட்சி, தேசிய ரீதியாக பெறுகின்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப 200 ஆசனங்களும் மாநில ரீதியாக பெறும் வாக்குகளுக்கேற்ப அடுத்த 200 ஆசனங்களும் 9 மாகாணங்களுக்கும் குறிப்பிட்டமுறையில் பிரிக்கப்பட்டு வழங்கப்படும்.
இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய கோட்பாடு என்பது, தனித்தனி மாநிலங்களுக்கு குறிப்பிட்ட பலம் வழங்கப்படுகின்றது; என்பதாகும். மாநிலக்கட்சிகள் மாநிலப்பட்டியலை மாத்திரம் வழங்கலாம் அல்லது இரு பட்டியல்களையும் வழங்கலாம். எனவே, கோட்பாட்டு ரீதியாக பிராந்திய சிறுபான்மைகளுக்கும் ஓர் விசேட பலம் வழங்கப்படுகிறது.
இலங்கையில் ஓர் இனம் 75% ஆகவும் மொத்த சிறுபான்மையும் 25% ஆகவும் இருக்கிறது. இந்நிலையில்தான் ஒரு சமூகம் ஜனாதிபதியைத் தனித்து தெரிவுசெய்யும் வாய்ப்பு இருப்பதால் அந்த இனத்தின் உணர்வுகளைத் தூண்டி ஒரு குடையின்கீழ் அச்சிறுபான்மையைக் கொண்டுவந்து வாக்குகளைச் சேகரிப்பதற்காக இனவாதம் முடுக்கிவிடப்படுகிறது. அதன் விளைவுகளையும் நாம் தற்போது அனுபவித்து வருகின்றோம்.
இதன்மூலம் சிறுபான்மைகள் இரண்டாந்தர பிரஜைகளாக நடாத்தப்படுகின்ற ஒரு நிலைமையை அனுபவித்து வருகின்றோம். ஒரு நாடு என்பது அங்கு வாழும் சகல சமூகங்களுக்கும் சொந்தம். ஆதன் ஆட்சியிலும் சகல சமூகங்களுக்கும் அர்த்தமுள்ள பங்கு இருக்கவேண்டும்.
அந்த வகையில் உலகத்தில் இவ்வாறு எண்ணிக்கைப் பெரும்பான்மைக்குப் பதிலாக சமூகங்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்கும் உதாரணங்களை மேலே பார்த்தோம். அவை பிராந்திய சமூகங்களாக இருக்கலாம் அல்லது இனரீதியான சமூகங்களாக இருக்கலாம்.
எனவே, இலங்கை ஓர் பல்லின சமூகம் வாழும் நாடு என்றவகையில் மேலே கூறிய கோட்பாட்டை எவ்வாறு அமுல்படுத்துவது என்பதைப்பற்றி சிந்திக்கவேண்டும்.
உதாரணமாக, ஜனாதிபதியாக வருபவர் தேசிய ரீதியில் பெரும்பான்மை பெறுகின்ற அதேவேளை, 25% சிறுபான்மையில் ஆகக்குறைந்தது 10% பெற்றிருப்பதைக் கட்டாயமாக்குகின்ற ஒரு தேர்தல்முறை பற்றி சிந்திக்கலாம். இதற்காக சிறுபான்மைகளுக்கு வேறு ஒரு நிறத்தில் வாக்குச் சீட்டு வழங்கலாம். அல்லது பொருத்தமான வேறு ஒரு முன்மொழிவைச் செய்யலாம்.
முக்கியம் ஒரு ஜனாதிபதி தெரிவில் கணிசமான அளவு சிறுபான்மையின் சம்மதமும் இருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். ( Mandatory stake) அவ்வாறான நிலை இருந்தால் ஜனாதிபதியாக வரவிரும்பும் யாரும் இனவாதத்தை கையிலெடுக்கமாட்டார், சிறுபான்மை வாக்குகளையும் கட்டாயம் பெறவேண்டும் என்பதற்காக. ( Inclusive government )
இதனை அவர்கள் இலகுவில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்தான். ஆனால் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளும் நிலை வரலாம். நாம் இதனை சமர்ப்பித்து இதன்பின்னால் உள்ள கோட்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டும். ஒரே நாளில் செய்துவிட முடியாது. தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டும்.
கைகூடுமோ இல்லையோ சிறுபான்மைகளின் பாதுகாப்புக்காகவும் இந்நாட்டின் ஒற்றுமைக்காகவும் முயற்சிப்பது நமது கடமையல்லவா?
குறிப்பு: கொழும்பில் சில அமைப்புகள் இணைந்து ஒரு முன்மொழிவைச் சமர்ப்பிக்க முயற்சி நடக்கிறது. அதில் ஒரு பகுதியை வரையும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. அதில் இந்த முன்மொழிவைச் செய்திருக்கிறேன். ஆயினும் கட்சிகளின் சந்தைப்படுத்தலுக்கு விசேட பெறுமானம் இருக்கிறது.
கட்சிகள் செய்யுமா?
( தொடரும்)