கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வேண்டுமென்றே வெளி மாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை போன்ற பெரும் அநியாயங்கள் நடந்தேறியுள்ளன – முதலமைச்சர் !

 

150205162505_hon_za_nazeer_ahamed_sri_lanka_slmc_eastern_provincial_council_512x288_bbc

முதலமைச்சர் ஊடகப் பிரிவு 

கடந்த அரசாங்கத்தின் போது கிழக்கில் சிறுபான்மை மக்கள் சகல விடயங்களிலும் பின் தள்ளப்பட்டு வந்தமை அனைவரும் அறிந்தது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை வேண்டுமென்றே வெளி மாகாணங்களுக்கும் தூர இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை போன்ற பெரும் அநியாயங்கள் நடந்தேறியுள்ளன. இப்படியான சம்பவங்களுக்கு இனியும் இடமளிக்க மாட்டேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

பயிற்சி முடித்து இன்னும் நியமனம் கிடைக்காமல் காத்திருக்கும் ஆசிரியர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்த போது அவர்களுக்கு முன்னிலையில் உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘கிழக்கு மாகாணத்தை வெறும் விளையாட்டுக்காகப் பயன்படுத்தலாம். விரும்பியவர் வந்து விளையாடலாம் என்ற எண்ணங்களை இனிமேல் யாரும் தங்களின் மனங்களில் வைத்திருக்க முடியாது. மிகவும் காரமாக நடந்துகொள்வேன். யாரும் யாரையும் ஏமாற்ற நினைக்கக் கூடாது’ என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், ‘கடந்த அரசாங்கத்தில் நிர்வாகம் புரிந்தவர்கள் இன்றும் அழுத்தத்தைப் பாவிப்பதாக உணரக்கூடியதாக உள்ளது. மக்கள் ஆணைகளைப் பெற்று மக்களுக்கு நல்லது செய்ய துடிக்கும் என்னைப் போன்ற அரசியல்வாதிகளை இப்படி மக்கள் ஆணைபெறாத சிலர் முடக்கி விட நினைப்பது கண்டிக்கத் தக்க விடயம். உதாரணமாக இன்று கல்வி அமைச்சின் செயலாளராக இருப்பவர் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அடிமையாக இருந்து செயற்பட்டவர். இன்று யாரையும் மதிக்காது செயற்பட நினைப்பது கண்டனத்துக்குரியது. கிழக்கு மக்களை வைத்து இவர் விளையாடலாம் என்று நினைத்தால் மிகவும் பாரிய பின்விளைவுகளை இவர் சந்திக்க நேரிடும் என்ற கசப்பான உண்மையையும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டார்.

‘கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பட்டம் முடித்து தங்களுக்கு இன்னும் தொழில் வழங்கப்படவில்லை என்ற கவலையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வயதுகள் ஏறிச்செல்வதால் இன்னும் இரட்டிப்புக் கவலையுடன் இருக்கிறார்கள் இதற்கு காரணம் என்ன? ஏன் இவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்க தாமதமானது? என்பது எல்லாம் இந்த அரசாங்கத்தில் அலசி ஆராயப்பட்டு சரியான முடிவுகள் எடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

‘எனவே, கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகள், வைத்தியசாலைகள், மற்றும் அரச காரியாலயங்களுக்குத் தேவையான ஆளணி பற்றாக்குறையை நிறைவேற்றவேண்டும். அதற்காக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளைப் பணித்துள்ளேன். இதற்காக சகலரும் தங்களின் ஒத்துழைப்புக்களை பூரணமாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், மக்களின் நன்மை கருதி செயற்படவேண்டும்’ என  அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.