பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை நான் ஒருபோதும் பாதுகாக்கவில்லை. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்குமாறு நான் வலியுறுத்தவுமில்லை.
சட்டத்தை மீறும் எவராயினும் இன மத பேதமின்றி நடவடிக்கை எடுக்குமாறே நான் சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டே மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது பொது பல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற போதிலும் எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் அதிருப்தியை வெ ளிப்படுத்தினர்.
அத்துடன் அவர் கைது செய்யப்படாமைக்கு ஜனாதிபதியாகிய நீங்கள்தான் காரணமா என்றும் கேள்வி எழுப்பினர். இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை அண்மையில் நடைபெற்ற மத தலைவர்களின் நல்லிணக்க கூட்டத்திற்கு ஞானசார தேரரை அழைத்தது ஏன் என்றும் முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி.க்களும் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதலளித்த ஜனாதிபதி, ஞானசார தேரரை பேச்சுவார்த்தைகள் மூலமான நல்லிணக்க வழிமுறைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியின் ஓர் அங்கமாகவே நாம் அக் கூட்டத்திற்கு அவரையும் அழைத்தோம். எனினும் அவர் நல்லிணக்கத்திற்கு ஒத்துழைக்காத வகையில் செயற்பாடுவாராயின் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிற்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள், அவை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகள் தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை குறித்த விபரங்களும் ஜனாதிபதியிடம் முஸ்லிம் எம்.பி.க்களால் கையளிக்கப்பட்டன. இச் சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்களான ஏ.எச்.எம்பௌசி , ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், பைசர் முஸ்தபா, ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர்களான ஹரீஸ், பைசால் காசிம், அமீரலி, எம்.பி.க்களான முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், காதர் மஸ்தான், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.