ஹசனலி விடயத்தில் ஹக்கீமின் அரசியல் முதிர்ச்சி தோற்று விட்டது…

rauff hasanali

ஹசனலியின் பொறியில் சிக்குண்ட ஹக்கீம்

ஒருவர் எவ்வளவு தான் அறிவாளியாக இருந்தாலும் ஒரு சில விடயங்களில் அவர் தவறிழைப்பது தவிர்க்க முடியாததொன்றாகும்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலி மூலம் தனக்கிருந்த பாரிய சவால்களை எதிர்கொள்ள செய்த பல விடயங்கள் அவருக்கு சாதகமாக முடிந்தாலும் தேர்தல் ஆணையாளரிடம் அவரது அரசியலாட்டம் பிழைத்து போய்விட்டது.தேர்தல் ஆணையாளர் 2016-12-15ம் திகதிக்குள் கட்சியின் செயலாளர் யார் என்ற முடிவை அறிவிக்குமாறு மு.காவிற்கு காலக்கெடு விதித்துள்ளார்.இவ்விடயத்தில் அமைச்சர் ஹக்கீமின் அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் சற்று தோற்றுவிட்டது.இந்த தோல்விக்கு ஹசனலியின் அரசியல் முதிர்ச்சியும் அனுபவமும் யாப்பு மாற்றத்தின் போது இடம்பெற்ற சில விடயங்களும் பிரதான காரணமாகவுமிருக்கலாம்.அமைச்சர் ஹக்கீமிற்கும் ஹசனலியிற்குமிடையே பல விடயங்களில் முரண்பாடுகள் தோன்றியிருந்தாலும் கடந்த 26வது பேராளர் மாநாட்டை தொடர்ந்தே அது உக்கிர நிலையை அடைந்திருந்தது.

2015-11-07ம் திகதி இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாட்டை தொடர்ந்து அமைச்சர் ஹக்கீமிற்கு எதிரான செயற்பாடுகளும் அவரது பல தோல்வி முகங்களும் வெளிப்படலாயின.மு.காவில் உள்ளோரிற்கு  அமைச்சர் ஹக்கீமை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிவு இதன் பிறகு தான் தோற்றம் பெற்றது என்றாலும் தவறில்லை.அமைச்சர் ஹக்கீம் ஹசனலியின் மீது கை வைத்தமையை தொடர்ந்து உறங்கி கிடந்த மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் உயிர் பெற்று எழுந்தார்.கிழக்கின் எழுச்சி என்று கிழக்கு தலைமைத்துவத்தை கோரி ஒரு வகைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.ஹசனலி சார்பு அணியினர் உருவாகினர்.இதுவெல்லாம் அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்தை குறி வைத்தமை தான் இதன் முக்கிய அம்சமாகும்.இவர்கள் அனைவரும் ஹக்கீமோடு சேர்ந்து பல வருடங்களாக அரசியலுக்கும் அப்பால் நெருங்கிய தொடர்பை கொண்டவர்கள் என்பதால் இவர்களுடன் அமைச்சர் ஹக்கீம் மோதுவது அவ்வளவு இலகுவானதல்ல.இவர்களின் தற்போதைய செயற்பாடுகள் மக்களிடையே தாக்கம் செலுத்தியிருப்பதை மறுக்க முடியாது.இதற்கு அமைச்சர் ஹக்கீம் 26வது பேராளர் மாநாட்டில் அனைவரையும் ஏமாற்றி யாப்பை மாற்ற முயற்சி செய்தமை தான் வழி சமைத்துக்கொடுத்திருந்தது.

 

26வது பேராளர் மாநாட்டில் ஹக்கீமின் விளையாட்டு

கடந்த மு.காவின்  26வது பேராளர் மாநாட்டில் மாற்றப்பட்ட யாப்பிற்கான அங்கீகாரத்தையும் கட்சியின் நிருவாகிகளையும் தேர்ந்தெடுப்பதற்கான உயர்பீடக் கூட்டத்தில் யாப்பு மாற்றங்கள் பற்றி வாசிக்கப்பட்ட போது பொதுச் செயலாளர் தவிர்ந்து ஆறு மேலதிக செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதன் போதே இது ஹசனலியின் பதவி குறைக்கும் செயற்பாடுகள் என சில சல சலப்புக்களும் எழுந்துள்ளன.இவ் ஆறு செயலாளர்களில் ஒன்றான உயர் பீட செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.இதன் பின்பு இவ் யாப்பு மாற்றம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதத்தில் உயர் பீட செயலாளரும் கட்சியின் செயலாளரும் என்ற இரு பதவிகள் மன்சூர் ஏ.காதருக்கு குறிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலதிக தேர்தல் ஆணையாளர் மொஹமத் ஹசனலியைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியுள்ளார்.ஹசனலி இவ்வாறானதொரு யாப்பு மாற்றம் நிகழவில்லை என்றதோடு தானே மு.காவின் செயலாளரென பதிலளித்துள்ளார்.

ஒரு கட்சியின் செயலாளரை மாற்றும் போது முன்பு இருந்த செயலாளருடன்  முரண்படாதவாறு சுமுகமான மாற்றமிருக்க வேண்டும்.அல்லது அவரை நீக்குவதற்கான தகுந்த காரணங்கள் முன் வைக்கப்படல் வேண்டும்.அங்கு ஹசனலியை நீக்குவதற்கான தகுந்த காரணங்கள் இடம்பெறவுமில்லை சுமுகமான மாற்றம் நடைபெறவுமில்லை.ஆறு செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தமையை  தொடர்ந்து கட்சிக்குள் சில சல சலப்புக்கள் தோன்றியுள்ள போதும் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கூட்டறிக்கையில் அது தொடர்பான விடயங்கள் எதனையும் உள்ளடக்காது அமைச்சர் ஹக்கீமின் கையொப்பத்துடன் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையாளருக்கும் ஒரு கட்சியின் தலைவருக்குமிடையில் எதுவித தொடர்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த கூட்டறிக்கையில் இது தொடர்பான சர்ச்சைகள் உள்ளடக்கப்பட்டிருந்தால் குறித்த செயலாளர் மாற்றம் தேர்தல் ஆணையாளரினால் நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொண்டுதான் இவ்விளையாட்டை ஹக்கீம் அணியினர் செய்திருக்கலாம்.அக் கூட்டறிக்கையில் ஹனலியின் கையொப்பத்தை பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கு ஹசனலி உடன்படவில்லை.மேலும்,மு.காவின் யாப்பு கூறும் விதத்தின் அடிப்படையிலும் குறித்த யாப்பு மாற்றம் நிகழவில்லை.இது தொடர்பில் தெளிவு படுத்துமாறு தேர்தல் ஆணையாளர் மு.காவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஒரு பிரதியை ஹசனலிக்கும் வழங்குமாறு பிரதி இடப்பட்டுள்ளது.இப் பிரதி ஹசனலியின் கையைச் சென்றடையவில்லை.

ஹசனலியின் ஹக்கீமிற்கெதிரான ஆட்டம்

போராட்டங்கள் பல வகைப்படும்.மக்களை ஒன்று சேர்த்து போராடுவது ஒரு வகை.அறிவு சார் போராட்டங்களை மேற்கொள்வது இன்னுமொரு வகை.தற்போது ஹசனலி மக்களை ஒன்று கூட்டி ஹக்கீமிற்கெதிராக போராட்டம் செய்யும் வயதெல்லையை தாண்டிவிட்டார்.இருந்தாலும் குறித்தளவு மு.காவின் உயர் பீட உறுப்பினர்களை ஒன்று கூட்டி போராடுமளவு அவரிடம் பலமுள்ளது.பலமிக்க அணியினர் இவரோடு இணைவார்களாக இருந்தால் மக்களை ஒன்று கூட்டியும் இவரை முன் நிறுத்தியும் சில விடயங்களை இலகுவாக சாதித்துகொள்ளலாம்.தற்போது அவர் அறிவு சார் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.இதில் ஒரு அங்கமாக ஹக்கீம் விடும் தவறுகளை பகிரங்கமாக சுட்டிக் காட்டி அவரின் செல்வாக்கை குறைத்துவருகிறார்.எதிர்காலத்தில் பகிரங்க மேடையேறியும் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம்.இவர் ஹக்கீமோடு முரண்பட்ட போது இவர்களின் முரண்பாட்டை தீர்க்க ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இக் குழுவானது இவர்கள் இருவருக்குமிடையில் பல சுற்று பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டதோடு ஹசனலியின் முதற் கோரிக்கையான கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இரு மௌலவிமார்களையும் மீள் இணைக்குமாறும் பரிந்துரை செய்தது.அதன் பிரகாரம் ஹக்கீமும் அவர்களை மீள் இணைத்தார்.தேசிய மாநாட்டில் வைத்து அவர்கள் இருவரையும் நீக்கியதை தம்பட்டமடித்து கூறியது மாத்திரமல்லாது இன்னும் இருவரையும் நீக்கப்போவதாகவும் அறிவித்த அமைச்சர் ஹக்கீம் இவர்களை இணைத்தமை ஹசனலியிடம் அவரது தோல்வி முகத்தை வெளிப்படுத்துகிறது.தற்போது இக் குழு இவ்விடயத்தில் பெரிதும் கவனம் செலுத்துவதாக அறிய முடியவில்லை.தற்போது ஹசனலி தான் முன்பிருந்தது போன்று பொதுச் செயலாளருக்கான பூரண அதிகாரத்தையே கோரி நிற்கின்றார்.இது வழங்கப்பட்டாலும் இதற்கு பிறகு ஹசனலி அமைச்சர் ஹக்கீமுடன் உடன்பட்டு செயற்படுவாரா என்பது சந்தேகமே.இதற்கான சிறு சமிஞ்சைகளையும் அவரிடமிருந்து காணக்கிடைக்கவில்லை.இக் குழுவினால் ஹசனலியை மு.காவை விட்டும் பிரிந்து செல்லாமல் பாதுகாக்கலாம்.இருப்பினும் தலைவரும் செயலாளரும் முரண்பட்ட நிலையில் ஒரு கட்சியை வழி நடாத்திச் செல்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.தற்போதுள்ளது போன்று தலைமைத்துவ சர்வதிகாரமில்லாமல் மு.காவின் யாப்பு கூறும் பிரகாரம் மஷூராவின் அடிப்படையில் செயற்பட்டால் தலைவர்,செயலாளர் முரண்பாடுகள் நிலவினாலும் கட்சியை அழகிய முறையில் கொண்டு செல்லலாம்.இவ்விடயத்திலிருந்தாவது மு.காவின் யாப்பு கூறும் பிரகாரம் மஷூரா அடிப்படையில் இயங்குவது நடைமுறைக்கு வருமா?

தேர்தல் ஆணையாளரின் உத்தியோக பூர்வ இணைய தளத்தில் செயலாளர் என குறிக்கப்பட்டிருந்த ஹசனலியின் பெயர் நீக்கப்பட்டு அவரின் பெயருக்கு பதிலாக மன்சூர் ஏ.காதரின் பெயர் மாற்றப்பட்டிருந்தது.இது தொடர்பில் ஹசனலி தேர்தல் ஆணையாளருக்கு இவ்வருடம் மார்ச் மாதமளவில் கடிதம் எழுதியுள்ளார்.இதன் போது தேர்தல் ஆணையாளர் தாங்கள் உங்களுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளிக்காமையாலேயே தாங்கள் இப் பெயரை மாற்றியாதாக பதில் அளித்துள்ளார்.இதற்கு ஹசனலி தனக்கு அக் கடிதம் கிடைக்கவில்லை என பதில் அளித்துள்ளார்.அக் கடிதம் ஹசனலியின் கையை சென்றடையாமல் தடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதற்கு தேர்தல் ஆணையாளர் பதில் வழங்கவில்லை.அது பற்றி  இவ்வளவு நாளும் வினா எழுப்பாத ஹசனலி மீண்டும் அண்ணளவாக ஒரு மாதத்திற்கு முன்பு வினா எழுப்பியுள்ளார்.இதன் காரணமாகவே அமைச்சர் ஹக்கீமிற்கு தேர்தல் ஆணையாளர் எதிர்வரும் 15ம் திகதியிற்குள் செயலாளர் யார் என அறிவிக்குமாறு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்வளவு நாளும் விட்டு விட்டு தற்போது ஹசனலி வினா எழுப்பியதிலும் சில அரசியல் விளையாட்டுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

இவரது தாமதத்தில் இரு விடயங்களின் செல்வாக்கு இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.ஒன்று இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளமையும் இரண்டாவது மு.காவின் அடுத்த பேராளர் மாநாட்டை நடாத்துவதற்கான காலம் நெருங்கிவிட்டமையுமாகும்.தற்போதைய நிலைமைகளின் படி இவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் அதிகரிக்கும் போது இறுதியில் நீதி மன்றம் சென்றே தீர்வு பெற வேண்டிய நிலை ஏற்படும்.மிக நீண்ட நாட்களுக்கு முன்பு இவ்விடயம் நீதி மன்றம் சென்றிருந்தால் அது மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு தீர்ப்பை நெருங்கியிருக்கும்.அமைச்சர் ஹக்கீம் ஹசனலியுடன் முரண்பட்ட காலப்பகுதியில் தோன்றிய அ.இ.ம.காவின் செயலாளர் பிரச்சினை தற்போது தீர்ப்பை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.நீதிமன்றம் தீர்ப்பை வழங்கும் வரை செயலாளரினால் மேற்கொள்ளக் கூடிய எந்தவொரு வேலையையும் மு.காவினால் செய்ய முடியாது.தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் இதற்கான தீர்வை நோக்கி நீதி மன்றம் செல்லும் போது அது தேர்தலில் மு.காவின் தனித்து களமிறங்குகையை பாதிக்கும்.

மு.காவின் அடுத்த பேராளர் மாநாட்டை நடாத்துவதற்கான காலம் கணிந்துவிட்டதால் தற்போது மு.காவின் செயலாளராக தேர்தல் ஆணையகத்தின் இணையத்தில் மன்சூர் ஏ.காதரின் பெயர் உள்ளமையினால் அவர் கட்சியின் செயலாளராக செயற்பட முடியும் என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையகமே வழங்கியதாக பொருள் வழங்கும்.அமைச்சர் ஹக்கீம் 27வது பேராளர் மாநாட்டை நடாத்தி வேறு செயலாளர் ஒருவரை தெரிவு செய்தால் ஹசனலியின் பிரச்சனைகளை ஒரு முடிவிற்கு கொண்டு வரலாம்.முடிவிற்கு கொண்டு வர முடியுமோ இல்லையோ அமைச்சர் ஹக்கீம் பக்க நியாயம் வலுவாகும்.பேராளர் மாநாட்டை நடாத்துவதற்கான அதிகாரம் செயலாளரிடமே உள்ளது.பேராளர் மாநாட்டை நடாத்துவதற்கான  காலம் கனிந்துவிட்டதால் தற்போது தேர்தல் ஆணையகத்தின் உத்தியோக பூர்வ இணையத்தில் மன்சூர் ஏ.காதரின் பெயர் உள்ளமை ஹசனலிக்கு ஆபத்தானது.எதிர்வரும் 14ம் திகதி மு.காவின் உயர்பீடம் கூடுகிறது.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹசனலி தனது அதிகாரங்களை கூட்டுவதும் குறைப்பதும் பேராளர் மாநாட்டிலேயே செய்ய முடியும் எனக் கூறியுள்ளார்.அதாவது உடனடியாக பேராளர் மாநாட்டை நடாத்த வைப்பதே ஹசனலியின் நோக்கம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.பேராளர் மாநாட்டை உடனடியாக நடாத்த அழுத்தம் வழங்குவதும் தேர்தல் நெருங்கும் காலப் பகுதியில் செயலாளர் பிரச்சினையை வைத்து அமைச்சர் ஹக்கீமிற்கு சவாலை ஏற்படுத்துவதற்கான உத்திதான் ஹசனலியின் தாமதத்திற்கு காரணமாக இருக்கலாம்.

அமைச்சர் ஹக்கீம் என்ன செய்யப் போகிறார்

மு.காவின் உயர் பீட உறுப்பினர்களின் பலம் அமைச்சர் ஹக்கீமிடம் அதிகமாக உள்ளதால் இப் பிரச்சினை அமைச்சர் ஹக்கீமிற்கு சார்பாக முடிவதற்கான சாதகத் தன்மையே அதிகமாகவுள்ளது.மு.காவின் 19வது தேசிய மாநாடு நடந்த காலப்பகுதியில் ஹசனலி,ஹக்கீம் அணியினர் இச் சம்பவம் தொடர்பாக உயர் பீட உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரித்து திருந்தமை இதன் இறுதி விளையாட்டு இப்படித் தான் முடியும் என்பதை சற்று ஊகித்துக்கொள்ளச் செய்கிறது.இருந்தாலும் அமைச்சர் ஹக்கீம் ஹசனலியின் மீது கை வைத்த காலப்பகுதியும் ஹசனலி இப் பிரச்சினையை கையாளும் முறையுமே அவருக்கு அதிகளவான அழுத்தங்களை வழங்கவல்லது.தற்போது அமைச்சர் ஹக்கீமிற்கு வேறு வழியில்லை ஹசனலியுடன் உடன்பாட்டின் அடிப்படையில் செல்ல வேண்டும்.இதற்கு அமைச்சர் ஹக்கீம் அன்று தொடக்கும் இன்று வரை முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.இந்த விடயத்தை ஆரம்பத்திலேயே ஹக்கீம் உணர்ந்து கொண்டார்.தான் ஹசனலியிடம் பல தடவைகள் பேச முயன்றதாகவும் அவரை சுற்றி உள்ளவர்கள் அதற்கு சம்மதிக்கின்றார்கள் இல்லையென பகிரங்கமாகவே கூறியிருந்தார்.இறுதியாக சாய்ந்தமருதில் இடம்பெற்ற மு.காவின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் ஜவாத் தன்னிடம் அமைச்சர் ஹக்கீம் ஹசனலியிடம் சென்று பேசுமாறும் அவர் விரும்பியதை நாம் வழங்குவோம் எனக் கூறியதாகவும் கூறியிருந்தார்.இவைகள் அமைச்சர் ஹக்கீம் எதைக் கொடுத்தாவது ஹசனலியை தனது பக்கம் எடுத்துக்கொள்ள முனைவதை எடுத்துக்காட்டுகிறது.இருந்தாலும் சில தடவைகள் அமைச்சர் ஹக்கீம் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற வகையில் செயற்பட்ட சம்பவங்களும் உள்ளன.

அமைச்சர் ஹக்கீம் ஹசனலி கேட்பது போன்று பூரண அதிகாரங்களை தற்போது வழங்குவது அவருக்கு மிகவும் ஆபத்தானது.அதனை அவர் ஹசனலி தனது பூரண விசுவாசியாக உணரும் வரை வழங்கவும் மாட்டார்.இந்த கருத்துப்பட அவர் கதைத்த சம்பவங்களும் உள்ளன.அமைச்சர் ஹக்கீம் ஹசனலி மீது ஏதாவது குற்றங்களை சுமத்தி அவரை கட்சியை விட்டும் நீக்குவதே ஹசனலியின் மீதுள்ள சவாலை எதிர்கொள்ள மிகவும் இலகுவான வழியாகும்.ஆனால்,ஹசனலியும் தன் மீது குற்றச் சாட்டுக்கள் எதனையும் முன் வைக்காத வகையில் செயற்பட்டு வருகிறார்.தற்போது அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியலை ஹசனலிக்கு வழங்கி தனது சவாலை தீர்க்க முனையலாம்.இதற்கான தூதுகளும் ஹசனலியை சென்றடைந்துள்ளன.அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு தேசியப்பட்டியலை வழங்குவாராக இருந்தால் அமைச்சர் ஹக்கீம் தனது கட்சிக்குள் கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும்.அமைச்சர் ஹக்கீம் வேறு வழியின்றியே இந்த நிலைக்கு வந்தார் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனம் இன்று தேசியப்படியலை குறி வைத்துள்ளவர்களிடம் இருப்பதாக இல்லை.

ஹசனலி தேசியப்பட்டியலை ஏற்பாராக இருந்தால் ஹசனலி பதவிக்கு சோரம் போனவராக மக்களிடம் கணக்கிடப்படுவார்.இருந்தாலும் தேசியப்பட்டியலை பெற்றுக்கொண்டு ஹக்கீமின் மகுடிக்கி ஆடாமல் தனது ஆட்டத்தை தொடர்ந்தால் அந்த சிந்தனையை மக்களிடமிருந்து மாற்ற முடியும்.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் போது முன்னர் போன்று அரசின் உயர் மட்டங்கள் ஹக்கீமின் அங்கீகாரமின்றியே அமைச்சு,பிரதி அமைச்சுக்களில் ஒன்றை வழங்க தயாராகவுள்ளது போன்ற கதைகளுமுள்ளன.ஹசனலி பதவி அதிகாரங்களை வைத்துக்கொண்டு ஹக்கீமிற்கெதிராக தனது ஆட்டத்தை தொடர்ந்தால் அது மக்களிடமும் எடுபடும்.இப்படியான விளையாட்டுக்களில் ஹசனலி ஈடுபடக் கூடும்.

தீர்வு தான் என்ன?

மு.காவினுள் ஒரு பிரச்சினை தோன்றும் போது மஷூரா அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றே மு.காவின் யாப்பு கூறுகிறது.இந்த பிரச்சினைக்கு ஒரு மஷூரா குழுவை மு.காவிற்கு அப்பாலும் நடுநிலையாளர்கள் சிலரை உள்வாங்கியதாக அமைத்து தீர்வு பெற்றுக்கொள்வதே இதற்குள்ள ஒரே ஒரு தீர்வாகும்.இப்படியான ஒரு குழு முன் வைக்கும் தீர்வை யாராலும் மறுக்க முடியாது.அப்படி மறுக்கும் போது அவர்கள் மக்களிடம் செல்லாக் காசாக கணக்கிடப்படுவார்கள்.இந்த மஷூரா சபையானது மு.காவிற்குள் மாத்திரம் அமைக்கப்படுமாக இருந்தால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது போகலாம் என்பதோடு தீர்விற்கான காலமும் நீடிக்கும்.எதிர்வரும் 14ம் திகதி மு.காவின் உயர் பீடம் கூடுகிறது.இருந்தாலும் எதிர்வரும் 15ம் திகதிக்கும் அமைச்சர் ஹக்கீமால் இந்த பிரச்சினையை ஒரு முடிவிற்கு கொண்டு வரக் கூடிய சாத்தியமில்லை.

மு.காவானது குர்ஆனையும் ஹதீதையும் யாப்பாக கொண்ட ஒரு கட்சி என்பதால் என்பதால் இவ்விடயம் ஒரு போதும் நீதி மன்றம் சென்று விடக் கூடாது.நீதி மன்றம் செல்லும் போது குர்ஆன் ஹதீதின் அடிப்படையில் இதற்கொரு தீர்வு பெற முடியாதென்ற அர்த்தத்தை வழங்கி விடும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 13-12-2016ம் திகதி செவ்வாய் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 73வது கட்டுரையாகும்.