ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்; அரசாங்கத்தினால் முழுமையான விசாரணை ஆரம்பம்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற குழப்பநிலையின் போது, ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

how-to-handle-incident-investigation

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும் அறிக்கையிடலின் போது பின்பற்றப்படும் ஒழுக்கக் கோவைகளை குறித்த ஊடகவியலாளர் தவிர்த்தமையே இந்த சம்பவத்தின் அடிப்படை என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக பாதுகாப்பு சட்டத்தின் படி இவ்வாறான பிரச்சினைகளில் கடற்படைத் தளபதியின் தனிப்பட்ட தலையீடு அவசியம் என, கடற்படை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். 

ஹம்பாந்தோட்டை துறைமுக வாளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கலைக்க முற்பட்ட போது அப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது. 

இந்த சந்தர்ப்பத்தில் சில ஊழியர்கள் காயமடைந்ததோடு, ஊடகவியலாளர்களுக்கும் கடற்படையினரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

குறிப்பாக கடற்படைத் தளபதியால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டதாக செய்திகள் வௌியாகின.