காலக்கெடு – கட்டுரையாளர் ஏ.எல். நிப்றாஸ்

rauff hakeem hasan ali basheer slmc

உடம்பில் ஏற்பட்ட சிறிய காயத்துக்கு உடனே முறையாக மருந்து கட்டாமல், அழகான வெள்ளைச் சீலையை சுற்றிவைத்துக் கொண்டு காலத்தை கடத்தினால், பின்னொரு நாளில் அது பெரிய காயமாகி விடும். ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டே அதனை குணப்படுத்த வேண்டியிருக்கும். அவர் ஏற்கனவே நீரிழிவு நோயாளியாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். இது, அரசியலுக்கும் பொருந்தும் என்பதை முஸ்லிம் அரசியல் உணர்த்திக் கொண்டிருக்கின்றது எனலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமான எம்.ரி. ஹசன்அலியின் அதிகாரங்களை குறைத்து, அப்பதவிக்கு வேறு ஒருவரை சூசகமான முறையில் நியமிப்பதற்காக கட்சித் தலைவர் றவூப் ஹக்கீம் எடுத்த முயற்சிகள் ஒரு முட்டுச்சந்துக்குள் கட்சியைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸின் உண்மையான செயலாளர் யார் என அறிவிக்கும்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கடிதம் ஒன்றை மு.கா. தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இப் பிரச்சினையை இம்மாதம் 15ஆம் திகதிக்குள் தீர்த்து வைக்குமாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மு.கா.விடயத்தில் இது காலத்தின் கெடுவாகவும் அமையக்கூடும்.

தொடக்கப் புள்ளி

2015 நவம்பர் மாதம் 07ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட யாப்புத் திருத்தத்தின் பிரகாரம், கட்சியின் செயலாளர் நாயகமான ஹசன்அலிக்கு மேலதிகமாக உயர்பீடச் செயலாளர் என்ற ஒரு பதவி உருவாக்கப்பட்டு அப்பதவிக்கு கல்வியியலாளரான ஏ.சீ.ஏ. மொஹமட் மன்சூர் நியமிக்கப்பட்டார். இவர் ஹசன்அலிக்கு ஒத்தாசையாக செயற்படுவார் என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அதற்குப் பிறகு தேர்தல் ஆணையாளருக்கு தலைவர் ஹக்கீம் அனுப்பியிருந்த கடிதத்தில், உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்டவர் கட்சியின் செயலாளர் போன்று குறிப்பிடப்பட்டிருந்தார். தேர்தல்கள் ஆணையாளர் இதற்கு பதிலளித்து ஹக்கீமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இதன்பிரதி ஹசன்அலிக்கும் தாறுஸ்ஸலாம் முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அக்கடிதம் ஹசன்அலிக்கு வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாகவே மேற்குறிப்பிட்ட விடயங்களை எல்லாம் அவர் பின்னர் தெரிந்து கொண்டார். தேசியப்பட்டியல் எம்.பி. வழங்கப்படாத வருத்தத்தில் இருந்த ஹசன்அலியை இது சினம் கொள்ளச் செய்திருந்தது. அதன் பிறகே அவர் காட்டமான நிலைப்பாடு ஒன்றை எடுத்தார்.

சமகாலத்தில் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தும் கட்சித் தலைவருடன் முரண்பட்டார். அவருக்கும் தேசியப்பட்டியல் எம்.பி. தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு மீறப்பட்ட போதிலும் எம்.பி. பதவி குறித்து அவர் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக, பிரதிநிதித்துவ அரசியலில் இருந்தே வெளியேறுவதாக அறிவிததுவிட்டு ஹசன்அலியுடன் கைகோர்த்தார். பின்னர் கனதியான வரிகளையும் கேள்விகளையும் உள்ளடக்கியதாக தவிசாளர் பசீர் தலைவர் ஹக்கீமுக்கும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கம் எழுதிய கடிதங்கள் அரசியல் அரங்கில் அதிர்வுகளை உண்டு பண்ணியது. அதன்பின் நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் பேசவிடாது தடுக்கப்பட்டதை தொடர்ந்து ஹக்கீம் – பசீர் பனிப்போர் உக்கிரமடைந்தது.

சாணக்கியம் என்ற பெயரில் மு.கா. தலைவர் அண்மைக்காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தலைவரின் துதிபாடிகளிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், கட்சியை உண்மையாக நேசிப்போரிடையே கடும் மனவெறுப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. செயலாளர் நாயகத்தின் அதிகாரங்களை குறைத்தமை, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்காக கட்சிக்காக பாடுபட்ட பல தனிநபர்களும் ஊர்களும் காத்துக் கொண்டிருக்க தன் சகோதரனுக்கும் நண்பருக்கும் அப்பதவிகளை கொடுத்தமை, அவ்வாறு தற்காலிகமாக கொடுத்த ஒரு எம்.பி. பதவியை இன்னும் மீளப் பெறாமல் இருக்கின்றமை, இப்படியான பிரச்சினைகளால் மு.கா.வின் அரசியல் செயற்பாடுகள் மந்தமடைவதற்கு வழிவகுத்தமை… என பல்வேறு விமர்சனங்கள் தலைவரை மையமாகக் கொண்டிருக்கின்றன.

சளைக்காத தலைமை

ஆனால், மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் எதற்கும் சளைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஹசன்அலி முரண்பட்ட வேளையிலும் தாறுஸ்ஸலாமின் உரிமைத்துவம் பற்றி பசீர் கேள்வி கேட்ட போதும் தலைவர் நிலைகுலைந்து போவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அவர் ஒரு வரட்டு துணிச்சலுடன் நிலைமைகளை எதிர்கொண்டார். அல்லது தான் தைரியமாக, உறுதியாக இருப்பதாக சுற்றி இருப்பவர்களுக்கு காட்டிக் கொண்டார். இது ஒரு முக்கியமான தலைமைத்துவ உத்தியுமாகும்.
உண்மையில் மு.கா.வின் தலைவர் இதைவிடப் பெரிய பிரளயங்களை எல்லாம் கட்சிக்குள் சந்தித்திருக்கின்றார். அதாவுல்லா வெளியேறினார். றிசாட் பதியுதீன் அணியினர் பிரிந்து சென்றனர். அதுமட்டுமன்றி, தற்போதை முதலமைச்சர் நஸீர் அகமட்டிடம் பணிபுரிந்தவர் என்று சொல்லப்படுகின்ற ஜமால்டீன் இஸ்ஹாக் என்ற நபர் கட்சிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தார். ஆனால் ஹக்கீம் அசரவில்லை. கட்சிசார்பான பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி தனிப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் முகம் கொடுத்து நிலைமைகளை சமாளித்தார்.

இதற்கு தலைவரின் தைரியமும் சாணக்கியமும் காரணம் ஆகும். ஆனால் அதற்கு இன்னும் இரண்டு முக்கிய காரணங்களும் இருந்ததை, ஆழமாக நோக்குவோர் புரிந்து கொள்வார்கள். முதலாவது, இவ்வாறு முரண்பட்டவர்கள் எல்லாம் சிறிது காலத்தின் பின்னர் ஒதுங்கிச் சென்று விட்டனர். இதனால் ஹக்கீம் வெற்றியாளரானார். இரண்டாவது, இந்த சிக்கல்கள் எழுந்த போதெல்லாம் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன்அலியும் தவிசாளர் பசீர் சேகுதாவூதும் தலைவர் றவூப் ஹக்கீமுடன் இருந்தார்கள். மூலோபாய திட்டங்களை வடிவமைத்து ஹக்கீமை காப்பாற்றும் முயற்சியில் பசீர் பிரதான பங்குவகித்தார். அதேவேளை இக்காலப்பகுதியில் கட்சியின் இமேஜை காப்பாற்றும் வேலையை ஹசன்அலி கவனித்துக் கொண்டார். ஆனால், அவற்றைப் போல, இம்முறை ஏற்பட்ட பிரச்சினையை மு.கா. தலைமை சமாளிக்க முடியாமல் திணறிப்போயுள்ளது என்றால் மிகையில்லை.

சமரச முயற்சி

இவ்வளவு காலமாக தனக்கு உறுதுணையாக இருந்த இருவர் இன்று கட்சிக்கு வெளியில் நிற்பதால், உள்வீட்டுப் பிரச்சினைகளை மட்டுமன்றி மக்களிடையே உருவாகியிருக்கும் விமர்சனத்தையும் சமப்படுத்த முடியாமல் போயிருக்கின்றமை கண்கூடு. உண்மையில் ஹசன்அலியினதும் பசீரினதும் வெற்றிடத்தை கடந்த ஒருவருட காலத்தில் ஹக்கீம் நன்றாக உணர்ந்திருப்பார். அதேபோல, இவ்விருவரும் தூர இருந்து அம்பு எய்து கொண்டிருந்தாலும் அபத்தமான விமர்சனங்களை முன்வைக்கவில்லை. ஆனால், இப்போது உறவு கொண்டாடுகின்ற வேறு யாராவது உறுப்பினர்களுடன் முரண்பட்டிருந்தால் எல்லா இரகசியத்தையும் இரவோடிரவாக வெளியிட்டிருப்பார்கள் என்பதையும் ஹக்கீம் அறியாதவரல்லர்.

இந்த பின்புலங்களினூடு, செயலாளருடனும் தவிசாளருடனும் உறவுகளை பலப்படுத்திக் கொள்ள மு.கா. தலைவர் விரும்பினார். ஹசன்அலியுடன் சமரசப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் முதலில் செயலாளருக்கான அதிகாரங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என்பதில் ஹசன்அலி உறுதியாக இருந்தார். மறுபக்கத்தில், பசீர் சேகுதாவூதுடன் பகிரங்க பேச்சுக்கள் இடம்பெறவில்லை என்றாலும் தூதுகள் விடப்பட்டதாக அறிய முடிகின்றது. எவ்வாறிருப்பினும், இருபக்க நிபந்தனைகள் கடுமையாக இருந்தமையாலும் விட்டுக் கொடுப்புக்கள் மட்டுப்படுத்தப்பட்ட காரணத்தாலும் சமரச முயற்சிகள் வெற்றியளிக்கவில்;லை. அத்தோடு, தலைரோடு செயலாளரும் தவிசாளரும் சேர்ந்து விட்டால் தமது பிழைப்பு கெட்டுவிடும் என்று நினைத்த சிலர் சிண்டுமுடியும் வேலையையும் மேற்கொண்டனர்.

முன்னதாக, செயலாளருடன் ஏதாவது ஒரு சமரசத்திற்கு வருவதற்கு தலைவர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், ஹசன்அலி கேட்ட மாத்திரத்தில் அதிகாரத்தை வழங்க முடியாது. அதற்காக பேராளர் மாநாட்டை நடாத்துதல் உள்ளிட்ட பல செயன்முறைகளை கட்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. என்றாலும் அவருக்கு தேசியப்பட்டியல் எம்.பி. வழங்கப்படப் போகின்றது என்று நினைக்குமளவுக்கு நிலைமைகள் முன்னேற்றமடைந்திருந்தன. ஆனால், ஒரு கட்டத்தில் தலைவர் ஹக்கீம் சமரச முயற்சிகளை முற்றாக கைவிட்டார்.

உள்மன அச்சம்

செயலாளர் நாயகத்தின் அதிகாரத்தை குறைக்க மு.கா. தலைவர் முயற்சி எடுத்தமை எம்.ரி. ஹசன்அலியை மட்டுமே இலக்காகக் கொண்டதல்ல. இதற்குப் பிறகு செயலாளர் நாயகமாக வரப் போகின்றவர்களை மனதிற் கொண்டே ஹக்கீம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை எடுத்ததாக அவருக்கு நெருக்கமானோர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஹசன்அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி. கொடுக்கப்பட்டால் அவருக்கு ஐ.தே.க.ஒரு பிரதி அமைச்சு பதவியை கொடுப்பதற்கு சாத்தியமுள்ளது. எனவே, அவருக்கு செயலாளர் அதிகாரத்தையும் எம்.பி.யையும் கொடுத்து, ஒரு அரை அமைச்சராக கட்சிக்குள் ஹசன்அலி அமர்வது குறித்து ஹக்கீம் சிந்தித்திருப்பார் குறிப்பாக, தலைவர் என்றுமில்லாதவாறு இம்முறை ஹசன்அலியுடன் பகைப்பட்டு விட்டார். இந்நிலையில் இத்தனை அதிகாரங்களோடு அவர் உள்ளே வந்தால் தனக்கெதிராக ஏதாவது செய்து விடுவாரோ என்று ஹக்கீம் அச்சப்படவும் கூடும்.

 

இந்தப் பின்னணியிலேயே செயலாளருடனான சமரச முயற்சிகள் யாவும் கைவிடப்பட்டிருந்ததாக அனுமானிக்க முடியும். மறுபுறத்தில் ஹசன்அலியும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு முழு விளக்கங்களுடன் கடிதமொன்றை அனுப்பிவிட்டு, தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் வரைக்கும் காந்திருந்தார். பசீரும் ரகசியமாக ஏதோ காரியங்களை மேற்கொண்டிருந்தார். ஆனால் மேலோட்டமாக பார்க்கின்ற போது செயலாளரினதும் தவிசாளரினதும் எதிர் நடவடிக்கைகள் எல்லாம் புஸ்வாணமாகி போய்விட்டதாக தோன்றியது. இந்நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இப்போது காலக்கெடு வைத்துள்ளது.

 

ஆணைக்குழுவின் தவிசாளர் மு.கா. தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒரு அரசியற் கட்சிக்கு இரு செயலாளர் பதவிகளோ செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் என இரண்டு பதவிகளோ இருக்க முடியாது. எனவே முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை 15.12.2016 இற்கு முன்னர் தீர்த்து, (உண்மையான) செயலாளர் யார் என்பதை ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவும். அதுவரையில் மு.கா.வுக்குரிய செயலாளர் அல்லது செயலாளர் நாயகத்தின் பெயரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிரலில் காட்சிப்படுத்தப்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இச் சிக்கலை இவ்வாறு தீர்த்துக் கொள்ளாவிடின் இனிவரும் தேர்தல் நடவடிக்கைகளின் போது மு.கா.வை எதிர் அணி கொண்ட அரசியற் கட்சியாக கருத நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கு முன்னர் கட்சி முக்கியஸ்தர்களுடன் மு.கா. தலைமைக்கு ஏற்பட்ட முரண்பாடுகள், பிளவுகளில் இருந்தும் இம்முரண்பாடு வேறுபடுகின்றது. ஏனெனில் அவர்கள் எல்லாம் சிறிது காலத்தின் பின் கட்சியை விட்டும் விலகிச் சென்று விட்டனர். ஆனால் பசீர் சேகுதாவூதும் ஹசன்அலியும் கட்சிக்குள் இருந்து கொண்டே நெருக்குதல்களை கொடுத்துக் கொண்டிருப்பதாலும், தனக்கு துணையாக நின்றவர்களே இன்று சவாலாக மாறியிருப்பதாலும் முன்னைய முரண்பாடுகளைப் போல் இதனை தீர்த்து வைப்பது ஹக்கீமுக்கு கடினமாகியுள்ளது.

சாத்தியமான நடவடிக்கை

இப்போது கட்சித் தலைவர் ஹக்கீமுக்;கு இரண்டு தெரிவுகள் உள்ளன. ஹசன்அலியுடன் சமரசமாகி அவரை செயலாளராக அறிவிக்கலாம். அல்லது ஹசன்அலியை புறமொதுக்கிவிட்டு அன்றேல் சமாளித்துவிட்டு மன்சூர் ஏ.காதரை அப்பதவிக்கு நியமிக்கலாம். மன்சூரை நியமிப்பதன் மூலம் ஹசன்அலியுடன் மேலும் முரண்பட்டால், அதனால் ஆத்திரமுற்று செயலாளர் தவிசாளருடனும் அதிருப்தியாளர்களுடனும் இணைந்து பதில் நடவடிக்கைகளில் இறங்கினால், கட்சியின் எதிர்கால தேர்தல் நடவடிக்கைகளில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கின்றது. கட்சிக்குள் இரண்டு பிரிவுகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவே கருதும்.
கட்சியின் முக்கிய உறுப்பினர்களான ஹசன்அலி, பசீர் போன்றோருடன் முரண்பட்டுக் கொண்டு கட்சியை முன்கொண்டு செல்வது கடினம் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட பலர் மு.கா. தலைவருக்கு அறிவுரை கூறியுள்ளதாக அறிய முடிகின்றது. இவ்வாறான விடயங்களை எல்லாம் கருத்திற் கொண்டு செயலாளருடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு மு.கா.தலைவரும், அதேபோல் தலைவருடன் சமரசமாகிப் போவதற்கு செயலாளரும் முயற்சிகளை மேற்கொள்வதாக தெரியவருகின்றது. இரண்டு பக்கங்களிலும் நல்லெண்ண சமிக்கைகள் தென்படுகின்றன. ஆனால் இக்கட்டுரை எழுதி முடிக்கப்படும் வரைக்கும் சந்திப்பு எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் காலத்தின் அவசியம் கருதி, தலைவர் ஹக்கீம் எதிர்வரும் 14ஆம் திகதி கட்சியின் உயர்பீட கூட்டத்தை கூட்டுவதற்கான அழைப்பை விடுத்துள்ளமை நல்ல விடயமாகும்.
எது எவ்வாறிருப்பினும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் இப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண இயலாது. மு.கா.வின் யாப்பில் செயலாளர் நாயகம், (உயர்பீட) செயலாளர் என குறித்துரைக்கப்பட்ட பதவிகளில் ஒன்றை இல்லாமலாக்கி அதில் ஒரு தனித்த பதவியை நிர்ணயிப்பதாயின் இன்னும் ஒரு பேராளர் மாநாட்டின் மூலமே அதனைச் செய்ய முடியும். ஆனால், உயர்பீடக் கூட்டத்தில் நிலைமைகளை இதயசுத்தியுடன் கலந்துரையாடி, தேர்தல் ஆணைக்குழுவின் கால அவகாசத்தை நீடித்து கேட்கலாம் அல்லது சலுகைக்காலம் ஒன்றை கோர முடியும். அதற்கிடையில் இப்பிரச்சினைக்கான சுமுக தீர்வுகளை தேட வாய்ப்புக் கிடைக்கும்.

 

நாட்டில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், கட்சிக்குள் இருக்கின்ற பிரச்சினைகளையே தீர்க்க முடியாத நிலையில் மு.கா. இருப்பதால், மக்களின் பிரச்சினைகள் இன்னும் கிடப்பில் கிடக்கின்றன. ஆதலால், கட்சிக்குள் அமைதி நிலவ வேண்டும் என்றும், அதனைப் பலமாக கொண்டு கட்சி முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாறாக, பிளவுகளும் முரண்பாடுகளும் கூத்தாடிகளுக்கே அவசியமாகவுள்ளது. எனவே இப்பிரச்சினையை மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

எல்லோரும், எல்லோரையும் எல்லாக் காலத்திலும் பேய்க்காட்டிக் கொண்டிருக்க முடியாது.
• ஏ.எல். நிப்றாஸ் (வீரகேசரி 11.12.2016)

nifras