காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது. காவல்துறை மா அதிபரின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க, அரசியல் சாசனசபை தீர்மானித்துள்ளது.
காவல்துறை மா அதிபரின் செயற்பாடு சர்ச்சைக்குரியது என இன்றைய தினம் கூடிய அரசியல் சாசனசபையில் பேசப்பட்டுள்ளது. அண்மையில் ரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மேடையில் தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கு பதிலளித்த போது, சந்தேக நபர் ஒருவரை கைது செய்யப் போவதில்லை எனவும், அது குறித்து நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்திருந்தார்.
காவல்துறை மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்ற காரணத்தினால், காவல்துறை மா அதிபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.