முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த 6-ந்தேதி பதவியேற்றது. ஓ.பன்னீர்செல்வம் உள்பட 31 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செய்த அமைச்சர்கள், அங்கிருந்து தலைமை செயலகத்துக்கு வந்து பணியைத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை இன்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் பகல் 12.20 மணிக்கு முடிந்தது. அதன்பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் அமைச்சரவை கூட்டம் சிறிது நேரம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், அதிகாரிகள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர், முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி மசோதா குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக அமைச்சரவைக் கூட்டரங்கில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.