அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக பதவி ஏற்பவர்கள் தொலைதூர வெளிநாட்டு பயணங்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்திலும், குறைந்த தூரம் கொண்ட பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட ‘மெரைன் ஒன்’ ஹெலிகாப்டரிலும் அவர் பயணம் செய்வது வழக்கம்.
இவை இரண்டுமே 70 பேரை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டவை. தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்காக கடந்த 2008-ம் ஆண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட போயிங்-747 ரக விமானத்தின் ‘காக் பிட்’டில் அமர்ந்திருக்கும்போது, விமானம் ஏறும்போதும் இறங்கும்போதும் எந்த மாற்றமும் உணரப்படுவதில்லை. இவ்வேளைகளில் பயணம் செய்பவர்கள் தடுமாற்றமின்றி நடந்துகூட செல்லலாம்.
ஏறும்போது, ஜனாதிபதி உபயோகிக்கும் மேஜை எதிர்விசையில் இயங்கி எப்போதுமே சம நிலையில் உள்ளது போல் இருக்கும். அவசர சிகிச்சைக்கு என தயார் நிலையில் மருத்துவ அறையும் விமானத்தினுள் உண்டு.
விமானத்தில் இருந்தபடியே நாட்டு மக்களிடையே பேசுவதற்கு வசதியாக, அனைத்து நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி பயணிக்கும்போது, விமானிகளிடமிருந்து எந்த அறிவிப்பும் ஒலிபரப்பப்பட மாட்டாது. ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னர் அவரது சவப்பெட்டியை விமானத்தில் கொண்டு செல்ல நேர்ந்தால், அதற்கேற்ப உள்ளே இருக்கும் பொருட்களை மாற்றம் செய்ய முடியும். விமானத்தின் நடுப்பகுதியில், அதிபரின் சவப்பெட்டியை ஏற்றி, இறக்கும் அளவிற்கு பெரிய கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
1990-ம் ஆண்டுகளில் ரொனால்ட் ரீகன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது வாங்கப்பட்ட விமானத்தைதான் தற்போதைய அதிபரான ஒபாமா பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் பயன்படுத்திவரும் தனிவிமானம் பழையதாகி விட்டதால் அந்த விமானத்துக்கு மாற்றாக ஜனாதிபதியின் பயணத்துக்காக ‘ஏர் போர்ஸ் ஒன்’ என்ற பெயருடன் நவீனரக 747 ரக ஜம்போ ஜெட் விமானம் வாங்க அமெரிக்க அரசு தீர்மானித்தது.
இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ‘போயிங்’ நிறுவனத்துக்கு ஆர்டர் அளிக்கப்பட்டது. வரும் 2024-ம் ஆண்டுவாக்கில் இந்த சிறப்பு விமானம் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த விமானத்துக்கான ஆர்டரை ரத்து செய்வதாக அமெரிக்காவின் வருங்கால ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
‘போயிங் நிறுவனம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால், இவ்வளவு பெரிய லாபம் சம்பாதிக்க நினைக்க கூடாது. எனவே, இந்த ஆர்டரை ரத்து செய்கிறோம்.
அமெரிக்க விமானப்படைக்கு விமானங்களை தயாரிக்கும் அரசு நிறுவனமே ஜனாதிபதி பயணிக்கும் சிறப்பு விமானத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கும். இதன்மூலம் அரசுக்கு வரி செலுத்தும் மக்களின் பணம் மீதப்பட்டுத்தப்படும்’ என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.