தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக தடை செய்யப்படவேண்டும் என உதய கம்மன்பில கருத்து தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வட,கிழக்கில் ஒரு முக்கியமான அரசியல் காட்சியாகும். அதிலும் சிறந்த ஜனநாயகம் மிக்க கட்சியே இது.
அவ்வாறு இருக்க இந்த வகையிலான கருத்துக்கள் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு இளைஞர்களை தள்ளும் ஒரு செயற்பாடாகவே காணப்படுவதாக பிரஜைகள் அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னபிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்த தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஸ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற யுத்தத்தினை ஒரு வழியாக பயன்படுத்துகின்றார்கள்.
அத்துடன் மீண்டும் இரத்தம் மற்றும் பிணங்களினூடாக அரசியல் இலாபத்தினை தேடும் முனைப்புக்கள் இவர்களிடம் காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் காணக்கிடைத்த ஒன்றே ஞானசார தேரர் கண்டியில் வைத்து முஸ்லீம் மக்களை தாக்க வேண்டும் என கூறிய கருத்தானது மீண்டும் ஒரு பயங்கரமான யுத்தத்திற்கு இடம்கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம், இந்த நேரத்தில் நாடு பற்றியும், நாட்டு மக்கள் பற்றியுமே அதிகமாக பேச வேண்டும்.
இதேவேளை, கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் மீண்டுள்ள எமது நாடு மீண்டும் ஒரு இரத்த கரையினை பார்ப்பதற்கோ, மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்திற்கு முகம் கொடுப்பதற்கோ தயாராக இல்லை எனவும் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.