கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வது கடினமாகும் : பாராளுமன்றில் அர்ஜூன

அதிகாரிகளின் செயற்திறன் இன்மை மற்றும் விளையாட்டு மாபியா காரணமாக கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வது கடினமாகும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

arjuna-ranatunga-640x400

பாராளுமன்றில் விளையாட்டு துறை தொடர்பாக இன்று(05) நடைபெற்ற விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், 

தற்பொழுது இலங்கை கிரிக்கெட் சபையானது தகுதியற்ற ஊழியர்களை நியமித்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் விளையாட்டு துறையில் எவ்வித முன்னேற்றங்களும் எட்டப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்ட அளவு சர்வதேச வெற்றிகள் ஈட்டப்படவில்லை. 

விளையாட்டுத் துறையானது தனி ஆளுமைகளை அபிவிருத்தி செய்யும் வியாபாரமாக மாற்றியமைக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றியிட்டுவதைக் காட்டிலும் கொண்டாட்டங்கள் மாத்திரமே ஒழுங்கு செய்யப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடைய புதல்வர்கள் தொடர்ச்சியாக விளையாட்டுத் துறையில் தலையீடுகளை மேற்கொண்டமையை நாம் கண்டோம். 

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் விளையாட்டுத் துறையிலும் நல்லாட்சி நிறுவப்பட்டது. இன்று ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ விளையாட்டுத் துறை மீது எவ்வித அநாவசிய தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. 

இன்றைய விளையாட்டுத் துறை அமைச்சர் மிகவும் சுதந்திரமான முறையில் தன்னுடைய பரிபாலன நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சர்ந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த கிரிக்கெட் தேர்தல்களின் பொழுது தற்போதைய நிர்வாகத்தினர் பொருட்டு அனைத்து விதமான தொடர்பாடல்கள் நடவடிக்கைகளையும் முன்னெடுத்த கொட்பி தாபரே என்னும் நபர் இலங்கையிலுள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

எனவே கடந்த தேர்தலின் பொழுது உதவிய அனைவருக்கும் தற்போதைய நிர்வாகம் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்துள்ளதென்பது தெளிவாகின்றதல்லவா? கடந்த கிரிக்கெட் சபை தேர்தல்களின் பின்னர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களின் பெயர்ப் பட்டியலை இச்சபைக்கு சமர்ப்பிக்குமாறு இச்சந்தர்ப்பத்தில் நான் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன். 

1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றி கொண்ட பொழுது எம்மிடம் மிகவும் திறமையான அணியொன்று இருக்கவில்லை. 

பணத்தை காட்டிலும் நாட்டிற்கு அன்பு செலுத்துகின்ற அணியினரே இருந்தார்கள். நாம் பணத்தை காட்டிலும் நாட்டை பற்றியே சிந்தித்தோம். இன்று விளையாட்டு துறையில் பணத்திற்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. 

பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டம் எம் நாட்டு விளையாட்டுத் துறையை ஆக்கிரமித்துள்ளது. பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்திற்கு மறைமுகமாக தொடர்புபட்ட மற்றும் நேரடியாக தொடர்புபட்ட நபர்கள் விளையாட்டுத் துறைப் பரிபாலனத்தில் உட்புகுவதை தடுப்பதற்கு கடுமையான சட்டங்களின் தேவை இன்று ஏற்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்ட திட்டங்களில் பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்துடன் தொடர்புடைய நபர்களிற்கு விளையாட்டு நிறுவனங்களில் பதவி வகிக்க இயலாதென குறிப்பிடப்பட்டுள்ளதென்ற போதும் இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை. 

இதன் காரணமாக பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்துடன் தொடர்புடைய பெரும்பாலான நபர்கள் சட்ட ஓட்டைகளின் உள்ளே புகுந்து விளையாட்டு பரிபாலனத்தின் உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். இது விளையாட்டின் நல்லாட்சிக்கு மாபெரும் சவாலாகும் எனத் தெரிவித்தார்.