அரசியல் மாய வலைக்குள் சிக்குண்ட றாசிக்

%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf

இலங்கை முஸ்லிம்களுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களினுள்ளும் அரசியல் பூதம் ஒழிந்து காணப்படுகிறான் என்ற நிலை வந்துவிட்டது.இலங்கை அரசினால் முயற்சிக்கப்பட்ட முஸ்லிம் தனியார் சட்ட மாற்ற முயற்சி இஸ்லாமிய ஷரீயாவுடனும் சர்வதேச நகர்வுகளுடனும் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் இதில் அரசியல் கலப்பது தவிர்க்க முடியாதவொன்று.இலங்கை அரசு ஜீ.எஸ்.பி வரிச் சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றத்தை  கொண்டு வர முயற்சி செய்த போது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் வீறு கொண்டெழுந்தது.முஸ்லிம் தனியார் சட்டம் எப்படி மாற்றத்திற்குள்ளாகப் போகிறதென்பது தொடர்பாக இலங்கை அரசிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தான் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் கட்டண ஆர்ப்பாட்டங்களை  மேற்கொண்டிருந்தது.என்ன மாற்றம் நடைபெறப்போகிறதென அறியாது ஆர்ப்பாட்டம் நடாத்துவது பொருத்தமானதா என்ற கோணத்தில் நோக்கும் போது அவர்களது ஆர்ப்பாட்டம் பொருத்தமானதல்ல.வெளிப்படையில் சிந்திக்கும் போது இப்படி தோன்றினாலும் உள்ரங்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேறுவதற்கான நிலை தான் இருந்தது.இவ்வகையில் நோக்கும் போது அவர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியது காலத்திற்கு தகுந்தது எனக் கூறலாம்.

16-11-2016ம் திகதி புதுக் கடை நீதி மன்றத்தில் றாஷிக் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 29-11-2016ம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.இங்கு அசாத் சாலியினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சஹீத் தௌஹீத் ஜமாதிற்கு எதிராக வாதாடினார்.இது போன்று அசாத் சாலியின் சகோதரர் றியாஸ் சாலியும் குறித்த சமகாலப்பகுதியில் தௌஹீத் ஜமாதிற்கு எதிரான சமிஞ்சைகளை காட்டினார்.இதில் அசாத் சாலி தொடர்புபட்டமை இவ்விடயத்தினுள் அரசியல் சாக்கடை ஒன்றிணைய முதற் காரணமாகியது.இருந்தாலும் மத ரீதியான கொள்கை வேறுபாட்டின் அடிப்படையில் தான் அசாத் சாலி இவ்விடயத்தில் தனது மூக்கை நுழைத்தமை யாவரும் அறிந்ததே.சட்டத்தரணி சஹீத்,அசாத் சாலியின் சகோதரர் றியாஸ் சாலி ஆகிய இருவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் என்பதால் இப் பிரச்சினையை அமைச்சர் றிஷாதின் தலையில் கட்டி அமைச்சர் றிஷாதை வீழ்த்தும் ஆயுதமாக சிலர் கையில் எடுத்தனர்.இதில் அரசியல் உள் நுழைந்ததன் காரணங்களில் ஒன்றாக இதனையும் கூறலாம்.அ.இ.ம.காவினர் சட்டத்தரணி சஹீத்தை தாங்கள் அனுப்பவில்லையென்றும் சட்டத்தரணி என்ற வகையிலேயே அங்கு சென்றார் எனக் கூறி இவ்விடயத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முயன்றனர்.

 

 

இருந்தாலும் அமைச்சர் றிஷாத் அணியினர் முன் வைத்த நியாயங்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் சிறிது நம்பகத்தன்மை குறைவாகத் தான் காணப்பட்டன.இச் சந்தர்ப்பத்தில் இவ்விடயத்திலிருந்து அமைச்சர் றிஷாத் மீதான மக்கள் பார்வையை திரும்ப அமைச்சர் ஹக்கீம் தானாக வந்து தலையை கொடுத்தார்.21-11-2016ம் திகதி திங்கள் கிழமை கட்டார் கட்டார் பனார் மண்டபத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனாவும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாதும் ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா என்ற சந்தேகம் தனக்கு ஏற்படுகிறது என்ற பாங்கில் உரையாற்றியிருந்தார்.இவ்விடயம் அரசியலானமையில் அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்று முக்கிய பங்கு வகிக்கிறது.இதன் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் அனைவரது பார்வையும் அமைச்சர் ஹக்கீம் மீது திரும்பியது.தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் றாஷிக் ஞானசார தேரரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே முஸ்லிம் என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டார் என்பதே முஸ்லிம்கள் பலருடைய நிலைப்பாடு.முஸ்லிம்களுடைய உரிமை விடயத்தில் போராடியதாலேயே இவருக்கு இந்த நிலை என்பதால் மார்க்க கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் இவர் மீது பலரும் இவ்விடயத்தில் சார்பு கொள்கையை கடைப்பிடித்தனர்.இப்படி இருக்கையில் அமைச்சர் ஹக்கீம் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பினரை பொது பல சேனாவுடன் ஒப்பிட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகவே பலராலும் நோக்கப்பட்டது.

அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதற்கு சற்று உடண்பாட்டு போக்குடையவர்.14-11-2016ம் திகதி திங்கள் கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் உயர் பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.ஆர்.ஏ.பஷீரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வின் போது உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதற்கு உடன்பட்டிருந்த நிலையில் சிலர் பிடிவாதமாக இருப்பதில் தனக்கு உடன்பாடில்லையென பகிரங்கமாகவே கூறியிருந்தார்.அவ் உரையிலேயே இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தோரை (ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்) கண்டித்துமிருந்தார்.எனினும்,இவரது இந்த பேச்சு பெரும் பேசு பொருளாகவில்லை.இங்கு நான் சுட்டிக்காட்ட வரும் விடயம் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை அதிகரிப்பதில் உடன்பாடு கொண்டவர்.இதுவே அவர் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தை விமர்சிப்பதற்கான காரணமாக இருக்கலாம்.

இவர் விமர்சித்த விடயம் முஸ்லிம்களுக்குள் இருந்துவிட்டால் பறவாயில்லை.இதன் தாக்கம் வேறு இடத்தில் செல்வாக்கு செலுத்தியது.அமைச்சர் றாஜித சேனாரத்ன கைது செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் றாஷிக்கை கோத்தபாயவின் கீழ் இயங்கிய தேசிய புலனாய்வு மையத்தின் தகவல் வழங்குனராக கூறி இதனை தேசிய அரசியல் மயப்படுத்தினார்.அமைச்சர் றாஜித சேனாரத்ன கூறிய கூற்றானது தௌஹீத் ஜாமத் நடாத்திய ஆர்ப்பாட்டமானது கோத்தபாயவின் ஏற்பாட்டின் கீழ் இவ்வரசை குழப்பும் நோக்கில் .திட்டமிடப்பட்டது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.முஸ்லிம்களிடையே தௌஹீத் ஜமாத்தின் கொள்கைகள் மீது பூரண உடன்பாடு இருப்பதாக கூற முடியாது போனாலும் இது வரை காலப்பகுதியில் அவர்கள் யாருமே அரசியல் பின்புல குற்றச் சாட்டுக்களை முன் வைக்கவில்லை.இவ் ஆர்ப்பாட்டம் நடாத்திய காலப்பகுதியில் தௌஹீத் ஜமாத் நாட்டின் நிலைமையை புரிந்து கொண்டு செயற்படத் தவறுகிறது போன்ற குற்றச் சாட்டுக்களே முன் வைக்கப்பட்டிருந்தன.இன்னும் நல்லாட்சியினர் கோத்தபாய மற்றும் மஹிந்தவின் நாமத்தை வைத்தே அரசியல் பிழைப்பு நடாத்துகின்றனர்.தௌஹீத் ஜமாத் முன்னெடுத்தது போன்ற ஆர்ப்பாட்டங்களை அமைச்சர் றாஜித சேனாரத்ன போன்றோர் ஏதாவதொன்றை கூறி களங்கம் கற்பித்து நல்லாட்சியை காப்பாற்ற வேண்டிய தேவையுமுள்ளது.தௌஹீத் ஜமாத் மஹிந்த ராஜ பக்ஸவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த அளுத்கமை கலவரத்தின் போது மிகப் பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இது போன்று மஹிந்த ராஜ பக்ஸவின் காலத்தில் மஹிந்த அரசை எதிர்த்து பல கட்டண அறிக்கைகளை எதுவித தயக்கமுமின்றி வெளியிட்டிருந்தது.இப்படியான அமைப்பின் மீது அரசியல் சாயம் பூச விளைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அல்லாது அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆதாரங்களை காட்டி கதைக்க வேண்டும். 

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கூற்றுக்கும் அமைச்சர் ஹக்கீமின் கூற்றுக்குமிடையில் மிக நெருங்கிய தொடர்புள்ளது.பொது பல சேனா அமைப்பானது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவின் கீழ் இயங்குகின்றதா என்ற அச்சம் அன்று தொடக்கும் இன்று வரை முஸ்லிம்களிடையே நிலவுகிறது.இந்த நிலையில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் றாஷிக்கிற்கும் கோத்தபாய ராஜபக்ஸவிற்குமிடையில் தொடர்புள்ளதாக அமைச்சர் ராஜிதவும் கூறியிருந்தார்.இதனடிப்படையில் பார்க்கும் போது பொது பல சேனா அமைப்பும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பும் கோத்தபாய என்ற எஜமானின் கீழ் ஒன்றுபடுகிறார்கள்.இதனை அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியதற்கு முதல் நாள் கூறியிருந்தார்.அமைச்சர் ஹக்கீமின் இக் கருத்திலிருந்து பிடித்துக் கொண்டு அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை கூறியிருக்கலாம்.சில வேளை அமைச்சர் ஹக்கீமிற்கும் அமைச்சர் றாஜிதவிற்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்களின் போது இவ்வாறான விடயங்கள் அவர்களை சென்றடைந்திருக்கலாம்.இதனையே ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தும் கூறியிருந்தது.அமைச்சர் ராஜிதவின் கூற்றுக்கு அமைச்சர் ஹக்கீமே அடித்தளமிட்டிருந்தாரென ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பில் தௌஹீத் ஜமாத் அமைச்சர் ஹக்கீமை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தும் அமைச்சர் ஹக்கீமிடமிருந்து தான் இந்த நோக்கிலேயே இதனை கூறினேன் என்ற சமாளிப்புக்கள் கூட வரவில்லை.தௌஹீத் ஜமாத்தின் செயலாளரின் விடுதலையை கருத்திற் கொண்டே தௌஹீத் ஜமாத்தும் அமைச்சர் ஹக்கீமின் இவ் விடயத்தில் சற்று நிதானப்போக்கை கையாள்வதாக சில தகவல்கள் உறுதி செய்கின்றன.

இந்த நிலைமைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்த மு.காவின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக பாய்ந்தார்.றாஷிகை மு.காவின் ஸ்தாபகத் தலைவராக வர்ணித்தும் அமைச்சர் ஹக்கீமை கண்டித்தும் அறிக்கைவிட்டார்.இலங்கையில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாதிற்கு சொல்லுமளவான ஆதரவாளர்கள் உள்ளமையை யாரும் மறுக்க முடியாது.அவ் அமைப்பானது கொழும்பிலும்,சம்மாந்துறையிலும் ஆயிரக் கணக்கானோரை ஒன்று கூட்டி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை இதனை துல்லியமாக்குகின்றது.இவர்களது ஆதரவாளர்களில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள்.அவர்களை அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக திருப்பினால் அமைச்சர் ஹக்கீம் கிழக்கில் அரசியல் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல.அதிலும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தினர் ஒரு விடயத்தை சாதிக்க வேண்டுமென களமிறங்கினால் அதில் முற்று முழுதாக தங்களை ஈடுபடுத்தி போராடக் கூடிய பண்புடையவர்கள்.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் தற்போது அரசியல் விடயங்களில் மூக்கை நுழைக்காது போனாலும் அவர்கள் ஒரு நிலையை அடைந்த பிறகு அரசியல் விடயங்களில் தலையிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.இவர்கள் அச்சொட்டாக பின்பற்றும் தமிழ் நாடு தௌஹீத் ஜமாத் தமிழ் நாட்டு அரசியல் மிகப் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றமை யாவரும் அறிந்ததே.தற்போதைய நிலைமைகளை வைத்து நோக்கும் போது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தை மிக விரைவில் அரசியல் களத்தினுள் காணக் கிடைக்கலாம்.அது பெரும் பாலும் மு.காவிற்கு எதிராகவும் அமையலாம்.இப்படி இருக்கும் போது 2016-11-29ம் திகதி அப்துர் றாஷிக்கின் வழக்கு மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் போது முன்னர் போன்றல்லாது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்திற்கு எதிராக எந்த முஸ்லிம் அரசியல் வாதியும் கலந்துகொள்ளவில்லை.இருந்த போதும் சிலர் மு.கா சார்பாக சட்டத்தரணிகள் சென்றதாகவும் இன்னும் சிலர் அ.இ.ம.கா சார்பாக சட்டத்தரணிகள் சென்றதாகவும் கூறினர்.இவைகள் இந்த விடயத்தை வைத்து அரசியல் காய் நகர்த்தல்கள் அதிகம் இடம்பெறுவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.இதற்கு முன்பு அசாத் சாலி ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்திற்கு எதிராக தனது சட்டத்தரணிகளை அனுப்பியிருந்தார்.இம்முறை அனுப்பாமை அவரது பிழையை அவர் உணர்ந்து விட்டதை எடுத்துக் காட்டுகிறது.வீம்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு நில்லாது தனது பிழையை ஏற்றுக்கொண்டு குறித்த விடயத்திலிருந்து விலகுவது சாதாரண விடயமல்ல.இவ்விடயத்தில் அசாத் சாலியும் ஞானசார தேரரும் ஒன்றிணைந்தமையால் அசாத் சாலியின் எந்த நியாயங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையில் முஸ்லிம்கள் இருக்கவில்லை.அவரது குறித்த விடயத்திலிருந்து பின் வாங்கியதன் பின்னணியில் இதுவும் இருக்கலாம்.

இது ஒரு சமூகப் பிரச்சினை.இதில் முஸ்லிம் கட்சிகளை சேர்ந்தவர்கள் அரசியல் செய்ய முற்படுவது ஆரோக்கியமானதல்ல.இது தொடர்பில் கருத்து வெளியிடும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மிகவும் நிதானமாக போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.இதனை இந் நேரத்தில் அரசியல் மயப்படுத்துவது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் றாஷிகின் விடுவிப்பை மேலும் சிக்கலாக்கும்.முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இதனை ஊதிப் பெருப்பிக்காது இயன்றவரை ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் றாஷிகை விடுவிப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.