அம்பாறை மாவட்டத்தில்காணிகளை மீள வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு கவனயீர்ப்பு போராட்டம்

அம்பாறை மாவடட விசேட நிருபர் 
  அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு நல்லாட்சி அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் இன்று(27) ஞாயிற்றுக் கிழமை காணி இழந்தவர்களினால்  கவனயீர்ப்பு போராட்டம்நடத்தப்பட்டது. 
  காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் காணிகளை இழந்த பலர் கலந்து கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது  காணிகளை துரிதமாக மீட்டுத்தருவதற்கு நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தின் ஐந்து இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம்நடத்தப்பட்டது. 
collage_fotor-1
  இக்கவனயீர்ப்பு போராட்டம் நிந்தவூர் பெரிய பள்ளி வாயல் முன்பாக காலை 9.00 மணியளவில் ஆரம்பமானதுடன் இதனைத்தொடர்ந்து ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பிரதேசங்களிலும் நடைபெற்றது.
  இப்போராட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி. கைறுதீன் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
 இலங்கை நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் அடையாளங்கள் அழிக்கப்படுவதும், இனரீதியாக ஒடுக்கப்படுவதிலும் மட்டும் நின்று விடாமல்  அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்ததும், பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்ததுமான காணிகளும் வௌ;வேறு காரணங்களை தெரிவித்து தடுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வந்துள்ளன.
  கடந்த கால யுத்தத்தையும், பயங்கரவாதத்தையும் காரணமாகக் கொண்டு அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை விவசாயிகளால் பரம்பரை பரம்பரையாக  செய்யப்பட்டு வந்த காணிகள் பறிக்கப்பட்டும், திட்டமிட்ட குடியேற்றக்காரர்களிற்கு பகிரப்பட்டும் வந்துள்ளதுடன், குடியேற்றக்கிராமங்களில் இருக்கும் இனக்குரோதமுள்ள காணி ஆக்கிரமிப்புக் குழுக்களினது அடாவடி அச்சுறுத்தல்களினால் இக்குடியேற்ற எல்லைகளில் மிகுதமுள்ள விவசாயக் காணிகளும்  ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளன.
 
  யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமக்கான சொந்தக்காணிகளுக்குள் செல்ல முடியும் என்ற கனவையும் கடந்த அரசாங்கம் கலைந்து விட்டது.  இதன் பின்னர் பெரும் ஆவலுடன் நல்லாட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சியில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாக்களித்த எமக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் இருவட ஆட்சிக்காலத்தை கடக்கவுள்ள நிலையில் ஒரு அங்குலமளவு காணியைக் கூட் மீட்டுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்காமை பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
 இதேவேளை தமது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை மீளவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை மகஜர்கள் வழங்கி, பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ள போதிலும் அரச நிர்வாகமானது கண்டும் காணாதது போன்று இருப்பது இம்மக்களிற்கு இழைக்கப்படும் உரிமை மீறலும் அநீதியுமாகும்.
  தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதும், வன, வனவிலங்கு பாதுகாப்பிற்கெனவும், தொல் பொருள் புனித பூமிக்கெனவும், பாதுகாப்புக்கான முகாம்கள் அமைப்பதற்கும், கூட்டுத்தாபனங்களின் பெயர்களிலும் திட்டமிட்டு எல்லைப்படுத்தப்பட்டு பாரம்பரிய விவசாய நிலங்களுக்குள் செல்லத் தடைவிதிக்கப்பட்டு வருவதுடன் காணி உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன.
  கடந்துபோன யுத்தத்தினால் நாம் இழந்தவைகள் போதும்! எமது உயிர்களைக் காத்துக்கொள்வதற்காக எமது பொருளாதாரத்தினை இழந்து விவசாய நிலங்களை விட்டு பிரிந்திருந்ததுதான் நாம் செய்த தவறா? 
  எம்மை இன்னுமின்னும் ஒடுக்குமுறைக்குள்ளாக்குவது, நம்பிக்கையுடன் வாக்களித்து எம்மால் ஆட்சிபீடம் ஏற்றிய நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்புக்களிற்கு வழிகோலுமா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது. 
 எதிர்காலத்தில் சிறுபான்மையினத்தின் பாதுகாப்பினை இந்த நல்லாட்சியானது உறுதிப்படுத்தும் என நம்புவதானது, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காணிப்பிரச்சினைகளிற்கு நியாயத்தினைப் பெற்றுத்தராமல் ஒருபோதும் நிகழாது. எனவே,குறித்த காணிப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக குறுகிய காலத்திற்குள் பிரச்சினைகளின் உண்மையினைக் கண்டறிந்து அதற்கான நீதி தீர்த்தல், பரிகாரத்தினை வழங்குதல் மாத்திரமல்லாது இவ்வாறு மீழவும் நிகழாமைக்கான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் எனக் கூறினார்