மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து வட கிழக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பதானது வரவேற்கத்தக்கது !

க.கிஷாந்தன்

மலையகத் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து வடக்குக் கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரக்கக் குரல் கொடுத்து வருவதானது வரவேற்கத் தக்க விடயமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

sri_fotor-1

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் டயகம தோட்டத்தில் அமைக்கப்படவுள்ள 150 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் ,பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் , மத்திய மாகாணசபை உறுப்பினர் எம்.உதயகுமார், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் புத்திரசிகாமணி , தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர்களான சிவானந்தன் , நகுலேஸ்வரன் , உதவிச்செயலாளர் அந்தனிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

தற்போதைய பாராளுமன்றத்தில் மலையகத்தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்திக் குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை , கல்வி , காணி மற்றும் வீட்டுரிமைகள் குறித்து இவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நாட்டில் காடுகளைக் கழனிகளாக்கிய தோட்டத் தொழிலாளர் சமூகத்துக்கு 25 பேர்ச்சஸ் நிலம் வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளனர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மலையகத் தமிழ் மக்களுக்குக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 4000 வீடுகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அதன் பின்பு அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சின் கீழ் இந்தத்திட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் இந்திய அரசாங்கம் 8 இலட்சம் ரூபாய் வழங்குகின்ற அதே வேளை மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு 2 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வீடமைப்புத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட மக்கள் இந்த வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு தமது பங்களிப்பினையும் வழங்க வேண்டும். அவ்வாறு செயற்படுகின்ற போதே இந்த வீடுகளை உணர்வு பூர்வமாக விரைவில் நிர்மாணித்துக் கொள்ள முடியும் என்றார்.