இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனது இலக்காகும் : ஜனாதிபதி

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எனது இலக்காகும். புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அடையவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவரின் நிலைப்பாடுகளையும் பெற்றுக்கொள்வோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். 

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நான் மறக்கவில்லை. இந்த நாட்டில் அனைத்து இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவேண்டுமென்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

maithripala-sirisena

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வெண்தாமரை இயக்கம் போன்றதொரு அமைப்பை விரைவில் ஸ்தாபிக்கவுள்ளோம். அந்த அமைப்பு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளது. 

அதேநேரம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய அரசியலமைப்பினை நிறைவேற்ற முற்படுகின்ற போது எதிர்ப்புகள் வரலாம். ஆதரவுகளும் கிடைக்கலாம். அவற்றை நாம் எதிர்கொண்டு புதிய அரசியலமைப்பை நிறைவேற்றவேண்டும். 

பாராளுமன்றத்தில் எவர் எதிர்த்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாம் அரசியலமைப்பை நிறைவேற்றுவோம் என்பது எனது நம்பிக்கையாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பி.க்கள் 16 பேரும் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பிலும் கூட்டமைப்பு எம்.பி.க்கள் விளக்கிக்கூறியுள்ளனர். இதனையடுத்து கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயங்கள் தொடர்பில் எடுத்துக்கூறியிருக்கின்றார்.