ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு எம்.பி.க்கள் 16 பேரும் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தங்கள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்தே வாக்களித்துள்ளனர். தற்போது முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்று வருகின்றன.

அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதுடன் பல விடயங்கள் முன்கொண்டு செல்லப்படுகின்றன. அதனை நாம் வரவேற்கின்றோம். 

sambanthan-tna-maithripa-1

எனினும் எம்மை தெரிவு செய்த மக்களுக்கு, அவர்கள் வழங்கிய ஆணைக்கு நாம் பதிலளிக்கவேண்டியுள்ளது. அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதே எமது உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளது. 

இப்பிரச்சினைகளுக்கான தீர்வு காலதாமதப்படுத்தப்படுவதால் எமக்குள்ளே கூட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆகவே தாங்கள் இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எடுத்துக்கூறியிருக்கின்றார். 

இதேபோல் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களின் எதிர்பார்ப்பு குறித்தும் ஏனைய கூட்டமைப்பு எம்.பி.க்களும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னமும் முயற்சித்து வருகின்றனர். யுத்தத்தின் பின்னரான அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது அவர்கள் அல்லல்பட்டு வருகின்றனர். 

முன்னைய அரசாங்கமானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகாண நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால்தான் கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ் மக்கள் பேராதரவினை வழங்கி அவரை புதிய ஜனாதிபதியாக்குவதற்கான ஆணையை அளித்திருந்தனர். 

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினர் தமது அன்றாடப் பிரச்சினைக்கும் அடிப்படை பிரச்சினைக்கும் தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது. 

உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகள் விடுவிக்கப்பட்டு சொந்த இடங்களில் தாம் மீளக்குடியேற்றப்படவேண்டும் என்றும் காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் கண்டறியப்படவேண்டுமென்றும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுதல் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்த எதிர்பார்ப்புக்கமைய புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து முன்னேற்றகரமான செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன.வடக்கு, கிழக்கில் படையினர் வசமிருந்த காணிகள் படிப்படியாக பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் 5 ஆயிரம் ஏக்கர் காணிகள் வரையில் விடுவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் சம்பூர் பகுதியில் 800 ஏக்கர் அளவிலான காணி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த செயற்பாட்டில் பெரும் மந்தநிலை தற்போது காணப்பட்டு வருகின்றது. 

பொதுமக்களின் காணிகள் மீள முழுமையாக ஒப்படைக்கப்படாமையினால் யாழ். குடாநாட்டில் இன்னமும் 30 ஆயிரம் பேரளவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் ஆறுமாத காலத்திற்குள் மீளக்குடியேற்றப்படுவார்கள் என்று கடந்த வருடம் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். 

அவ்வாறு உறுதியளித்தபோதிலும், அந்த விவகாரத்திற்கு இன்னமும் தீர்வுகாணப்படவில்லை.காணாமல்போனோர் விவகாரத்தை எடுத்துக்கொண்டால் காணாமல் போன தமது உறவுகளைத் தேடி மக்கள் தொடர்ந்தும் அலைந்து வருகின்றனர். 

பல போராட்டங்களை நடத்திய போதும் அதற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. தற்போதும் காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட செயலணியொன்றினை அமைப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அதனை அமைப்பதற்கான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்படவில்லை.

அரசியல் கைதிகள் விவகாரமும் இன்னமும் இழுபறி நிலையிலேயே காணப்பட்டு வருகின்றது. இவ்வாறு மீள்குடியேற்றம் முதல் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில் இழுபறி நிலையே ஏற்பட்டிருக்கின்றது. 

இதனைவிட இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அந்த விடயத்திலும் இழுத்தடிப்புப் போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 

ஐ.நா. மனித உரிமை பேரவையில் அரசாங்கம் உறுதியளித்த விடயங்களில் கூட தற்போது பின்வாங்கும் நிலை காணப்படுகின்றது. இதனால் பொறுப்புக்கூறும் விடயத்தில் கூட அரசாங்கம் உரிய வகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்திருக்கின்றது. 

அரசியலமைப்பை மாற்றியமைத்து இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அந்த விடயத்தில் கூட இன்னமும் முழுமையான அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. 

இந்த நிலையில நல்லிணக்க அரசாங்கத்தை ஆதரித்து வரும் எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையின் காரணமாக பெரும் அதிருப்தியை சந்தித்து வருகின்றது. 

தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொள்ளும்நிலை ஏற்பட்டிருக்கின்றது.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த வருட இறுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கடந்த வருடம் உறுதியளித்திருந்தார். 

ஆனால், அந்த உறுதிமொழியும் தற்போதைக்கு நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. 

இவ்வாறான நிலையில் தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது ஆதங்கத்தை தெரிவித்திருக்கின்றனர். 

உண்மையிலேயே தமிழ் மக்களது அன்றாட பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில் அரசாங்கத்தின் மீதும் அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மீதும் தமிழ் மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகின்றது. 

எனவே இதனை உணர்ந்து தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினைக்கும் தீர்வைக்காண அரசாங்கமானது துரித கதியில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.