க.கிஷாந்தன்
அட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரையிலான செல்லும் பிரதான வீதியில் போடைஸ் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சேதமடைந்த போடைஸ் பாலத்தினை உடனடியாக புனரமைத்து தருமாறு சம்மந்தப்பட்டவர்களை வழியுறுத்தி தனியார் பஸ் சேவையாளர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவையாளர்கள் உள்ளிட்ட அப்பிரதேச மக்கள் பலர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
24.11.2016 அன்று காலை இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டமானது போடைஸ் பகுதியில் இடம்பெற்றது. இதில் 50ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ஸ்தலத்திற்கு விரைந்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு, மத்திய மாகாண பெருந்தெருக்கள் அமைச்சருக்கு தொலைபேசியின் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி இப்பாலத்தினை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதற்கமைய அமைச்சர் பாலத்தினை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். அதன்பின் கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
பாலம் உடைந்துள்ளதனால் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே பயணிக்க கூடியதாகவுள்ளது.
அத்தோடு இவ்வீதியினூடாக பாரவூர்த்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.