இனமுறுகலை தோற்றுவிக்கும்வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர் முன்னைய ஆட்சியில் உளவாளியாகவும் கோத்தபாய ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவாகவும் செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த இடத்தில் ஒருவிதமான சதி இடம்பெறுவதை நாங்கள் உணருகின்றோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 90 வீதமான முஸ்லிம் மக்கள் எமக்கு வாக்களித்தனர்.
எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி அந்த மக்களை வாக்களிப்பிலிருந்து பகிஷ்கரிப்பு செய்வதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
அதேபோன்று வடக்கில் ஆவா குழுவை நிறுவி அங்கும் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இதன்மூலம் முஸ்லிம் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் பெரும்பான்மை மக்களின் வாக்குகள் மூலம் வெற்றிபெறுவதற்கு ராஜபக்ஷ தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்றார்.