மோசமான நிர்வாகத்துக்கு ரிசர்வ் வங்கி முன்னுதாரணம் ஆகிவிட்டது என்று மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக மோடி அரசை விமர்சனம் செய்து உள்ளார்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடிதான் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது. இன்று மாநிலங்களவை தொடங்கியதுமே எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. துணை சபாநாயகர் குரியன் எதிர்க்கட்சியினரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம்நபி ஆசாத் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேச விரும்புகிறார் என்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ரூபாய் நோட்டு ஒழிப்பு தொடர்பாக பேசவிரும்பினால், எதிர்க்கட்சியினர் விவாதத்தை தொடங்கவேண்டும், பின்னர் மன்மோகன் சிங் பேசட்டும். விவாதம் நடைபெறவில்லை என்றால் எதிர்க்கட்சியை சேர்ந்த யாரையும் பேச அனுமதிகிடையாது என்றார் அருண் ஜெட்லி. இதனையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பேச அனுமதிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
துணை சபாநாயகர் குரியன் பேசுகையில், நான் மன்மோகன் சிங்கை பேசுவதற்கு அனுமதிக்கின்றேன், நான் அவர் பேசுவதை தடுக்கவில்லை என்றார். மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த் சர்மா பேசுகையில், பாராளுமன்றத்திற்கு வெளியே பேசும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாங்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டியது இருக்கும் என்றார். எதிர்க்கட்சினர் அமளியினால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து 12 மணிக்கு அவை மீண்டும் தொடங்கியது.
பிரதமர் மோடி மாநிலங்களவை விவாதத்தில் கலந்துக் கொண்டார்.
மன்மோகன் சிங் கண்டனம்
மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மன்மோகன் சிங் பேசுகையில்,
ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியின் நோக்கத்தில் எந்தஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. நாட்டின் நலனுக்கான நடவடிக்கை என்பதில் மாற்ற கருத்து கிடையாது. ஆனால் திட்டம் செயல்படுத்தலில் நிர்வாகம் நிலையாக மோசமாகிவிட்டது.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ஏற்படும் விளைவானது என்னவென்று தெரியாது. 50 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஏழை மக்களுக்கு 50 நாட்கள் கால அவகாசம் என்பது ஒரு மோசமான விளை ஏற்படுத்தும். மக்களுக்கு அளிக்கப்பட்ட 50 நாள் கால அவகாசமானது மிகவும் குறைவானது. மக்கள் பெரும் இன்னல்களை எதிர்க்கொண்டு உள்ளனர். இதில் 65 பேர் தங்களது உயிரை இழந்து உள்ளனர்.
இப்போது நடந்து உள்ளது, நிதி மற்றும் வங்கி அமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க செய்துவிடும். எந்த நாட்டிலும் பொதுமக்கள் அவர்களுடைய பணத்தை டெபாசிட் செய்துவிட்டு எடுக்கமுடியாது என்ற நிலையை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்க. ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை அமல்படுத்தும் வழியானது விவசாயம், சில தொழில்கள் மற்றும் அமைப்புசாரா தொழில்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கூட்டுறவு அமைப்புகளும் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் மன்மோகன் சிங் பேசுகையில், மோசமான நிர்வாகத்துக்கு ரிசர்வ் வங்கி முன்னுதாரணம் ஆகிவிட்டது. ரூபாய் ஒழிப்பு விவகாரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழலை மத்திய அரசு நடத்தி உள்ளது என்றார்.
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால் ஏற்படும் இழப்பை பிரதமர் மோடி குறைத்து மதிப்பிட்டு உள்ளார் என்ற சாடிய மன்மோகன் சிங், அதற்கான விளக்கத்தையும் மாநிலங்களவையில் வெளியிட்டு உள்ளார். இது ஜிடிபியை 2 சதவிதம் வரையில் பாதிக்கும், இது குறைத்து மதிப்பிடப்பட்டு உள்ளது. வங்கி அமைப்பானது தினந்தோறும் விளக்கங்களுடன் வருவது சரியானது கிடையாது. பிரதம அமச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மோசமான நிர்வாகத்தின் பிரதிபலிபே இது என்று மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
பாதிப்பில் இருந்து மக்கள் மீள பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.