நாமல் ராஜபக்சவின் குடியுரிமை பறிக்கப்படலாம் ?

 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது சட்டத்தரணியாக பணியாற்றி வந்த போதிலும் கூடிய விரைவில் அவருக்கு அந்த சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

namal

குறிப்பாக நாமல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில், இந்த விடயம் தொடர்பான தகவலை சட்டத்தரணிகள் சிலர் நீதிமன்றத்திற்கு முன்வைக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

நாமல் ராஜபக்ச சட்டக்கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. 

சட்டக்கல்லூரியில் நாமல் ராஜபக்சவின் சமகால மாணவரான துஷார ஜயரத்ன, நாமல் ராஜபக்ச பரீட்சையின் வினாக்களுக்கு விடை எழுத குளிரூட்டப்பட்ட அறையை வழங்கி, சட்டக்கல்லூரியின் அதிபர் பதில் எழுத உதவியதாக நேரடியாக குற்றம் சுமத்தியிருந்தார். 

இந்த குற்றச்சாட்டை சுமத்தியதை அடுத்து ராஜபக்சவினரிடம் இருந்து வந்த மரண அச்சுறுத்தல் காரணமாக துஷார ஜயரத்ன வெளிநாடு சென்றார். 

அதேவேளை நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பணச் சலவை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு பல ஆண்டு சிறை தண்டனையை எதிர்நோக்கும் ஆபத்தும் இருப்பதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

மேலும் இந்த குற்றச்சாட்டின்படி நாமல் ராஜபக்சவின் குடியுரிமையும் பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்