கிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்குக்கே கொண்டு வர ACMC அதிரடி நடவடிக்கை

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 37 ஆசிரியர்களையும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடமாற்றி நியமிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேற்கொண்டுள்ள முயற்சி வெற்றியளித்துள்ளது.
 
rishad-jameel-rizad
 
இவ்விடயத்தை கலாநிதி ஏ.எம்.ஜெமீல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு சென்று, வலியுறுத்தியதன் பேரில், அவர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக குறித்த ஆசிரியர்களை அவர்களது சொந்த மாகாணமான கிழக்குப் பாடசாலைகளுக்கு இடமாற்றிக் கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
இம்முறை தேசிய கல்விக் கல்லூரியில் இருந்து வெளியேறிய ஆசிரியர்களுக்கான நியமனத்தின்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த 37 ஆசிரியர்கள், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் தமது கடமையை பொறுப்பேற்பது தொடர்பில் பெரும் சங்கடத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
 
இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவிக்கையில்;
 
“கிழக்கு மாகாண சபை நிர்வாகத்தின் பொடுபோக்கு காரணமாகவே குறித்த ஆசிரியர்களுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர், தனது மாகாணத்தின் கல்வி நிலையிலும், ஆசிரியர்களின் நலன்களிலும் கரிசனையற்றிருப்பதனாலேயே கிழக்கை சேர்ந்த ஆசிரியர்கள் வட மாகாண பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இது மிகவும் கவலைக்கும் விசனத்திற்குமுரிய விடயமாகும்.
 
கிழக்கு மாகாணத்தில் 5021 ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என அண்மையில் கிழக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அவ்வாறாயின் தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கு முன்னதாக இந்த மாகாணத்தை சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்களை ஏன் அவர் இங்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் அசட்டையாக இருந்தார் என கேட்க விரும்புகின்றேன்.
 
கிழக்கின் கல்வி, பொருளாதார, சமூக அபிவிருத்தி விடயங்களில் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட வேண்டிய இந்த மாகாணத்தின் அரசியல் தலைமை, சந்தர்ப்பங்களை தவற விட்டு வருவதானது மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என்பதையும் தனக்களிக்கப்பட்டுள்ள பொறுப்பு வாய்ந்த பதவியை தனது சொந்த நலன்களுக்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
 
எவ்வாறாயினும் மேற்படி ஆசிரியர்களின் நிர்க்கதி நிலையை நான் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கவனத்திற்கு அவசரமாக கொண்டு சென்றதன் காரணமாக அவர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பயனாக அந்த ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்திற்கே நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளார். இதற்காக அமைச்சர்கள் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.
 
ஆகையினால் குறித்த ஆசிரியர்கள் எனது சாய்ந்தமருது அலுவலகத்தின் 0672224584 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அஸ்லம் .எஸ்.மௌலானா